திமுகவின் சொத்து பட்டியல்.. அண்ணாமலைக்கு திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி போட்ட 15 நாள் கெடு!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்ட திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் முதற்கட்டமாக முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன், முதல்வரின் சகோதரி கனிமொழி கருணாநிதி, தமிழக அமைச்சர்கள் கே என் நேரு, ஏ வ வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரைமுருகன்,பொன்முடி, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, ஜெகத்ரட்சகன், பொன் கௌதம சிகாமணி, சன் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன், உள்ளிட்டோரின் சொத்து மதிப்பு என ஒரு பட்டியலை வெளியிட்டிருந்தார்.
அண்ணாமலை வெளியிட்ட திமுக அமைச்சர்கள், எம் பி க்களின் சொத்து மதிப்பு பட்டியல் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அவர் வெளியிட்ட அறிக்கையில் ஏதேனும் ஒரு ஊழல் குற்றச்சாட்டையும் கூறவில்லை, அனைவரின் நேரத்தையும் அவர் வீணடித்து விட்டார், அவரின் அறியாமையை பார்த்தால் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்ற சந்தேகம் வருவதாகவும், அண்ணாமலை வெளியிட்ட பட்டியலில் உள்ள 12 பேரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டு தங்களது சொத்து பட்டியலை தாக்கல் செய்தவர்கள், அவற்றில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சாதாரண மக்கள் கூட வழக்கு தொடரலாம், அவரின் பேட்டி ஒரு சீட்டிங் தான் இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
அண்ணாமலை தமிழகம் முழுவதும் நீதிமன்றத்திற்கு செல்பவர், நீதிமன்றங்களில் திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இது நாள் வரை நிரூபிக்கப்படவில்லை, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களை விட இவர் ஒன்றும் பெரிய தலைவர் கிடையாது, அவர் வெளியிட்ட 1,408 கோடி சொத்தை இன்னும் பதினைந்து நாட்களுக்குள் அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும், ஆருத்ரா முறைகேட்டில் அண்ணாமலை 84 கோடி பெற்றுள்ளார். அவரின் இந்த அறிக்கைக்கு எல்லாம் திமுகவினர் பயப்பட மாட்டார்கள். இவ்வாறு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.