நாம் செய்யக்கூடிய வழிபாடுகள், பூஜைகள் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றால், அதனை புதன் கிழமைகளில் தான் செய்ய வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். “பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்ற பழமொழியும் உண்டு. குரு பகவானின் அருள் மட்டும் இருந்தால் போதாது, புதன் பகவானின் அருளும் வேண்டும் என்பதை தான் இவ்வாறு கூறுவார்கள்.
புதன் பகவான் கிரகங்களின் இளவரசர் என்று அழைக்கப்படக் கூடியவர். ஒருவர் மன வலிமையுடன் இருக்கிறார் என்றால் அவர் புதன் பகவானின் அருளை பெற்றவர்கள் என்று அர்த்தம். இதற்கு மாறாக ஒருவர் மன வலிமை இல்லாமல் எப்பொழுதும் குழப்பத்துடனும், நம்பிக்கை இல்லாமலும் இருக்கிறார்கள் என்றால், அவர்களது ஜாதகத்தில் புதன் வலிமை இழந்து இருப்பார்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த புதன் பகவானுக்கு உரிய புதன் கிழமையில், நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் உங்களது கைக்கு வர வேண்டும் என்று வேண்டி, இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் உங்களது வேண்டுதல் நிறைவேறி உங்களது பணம் உங்கள் கைக்கு வரும். இந்த ஒரு வழிபாட்டை புதன் கிழமையில் புதன் ஹோரையில் செய்ய வேண்டும்.
புதன் ஹோரை என்பது அதிகாலை 6 மணி முதல் 7:00 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 2:00 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 9:00 மணி வரையிலும் இருக்கும். இந்த மூன்று நேரங்களில் உங்களால் எந்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய முடியுமோ, அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை தொடர்ந்து ஐந்து புதன் கிழமை செய்ய வேண்டும்.
புதனுக்கு உரிய எண் என்றால் ஐந்து. எனவே இந்த வழிபாட்டை செய்வதற்கு ஐந்து வெற்றிலை, சிறிதளவு நெய், நூல் மற்றும் ஐந்து ரூபாய் நாணயம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டை நீங்கள் கொடுத்து ஏமாந்த பணம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்ய வேண்டும். உங்களது பணம் தொலைந்து விட்டாலோ அல்லது திருடு போய்விட்டாலோ இந்த வழிபாடு பயன் தராது.
பிறரது அவசர காலத்திற்கு நீங்கள் கொடுத்து உதவிய பணம் உங்களது கைக்கு வராமல் இருக்கும். அதாவது உங்களிடம் பணத்தை வாங்கி விட்டு உங்களது கண்ணில் படாமல் மறைவாக இருப்பார்கள், அல்லது இப்பொழுது தருகிறேன் அப்பொழுது தருகிறேன் என்று காலம் கடத்திக் கொண்டு இருப்பார்கள். இதுபோன்று இருக்கக்கூடிய சமயங்களில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 5 வாரம் செய்ய வேண்டும். பெண்களுக்கு இடையில் மாதவிடாய் நாட்கள் வந்து விட்டால், அந்த வாரம் விட்டு அடுத்த வாரத்தில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ளலாம், அல்லது வீட்டில் இருக்கும் மற்றவர்களை செய்ய சொல்லலாம்.
ஐந்து வெற்றிலைகளை நன்றாக கழுவி விட்டு, அதன் காம்புகளை நீக்கி விட வேண்டும். அதன் பிறகு புதன் விரல் என்று சொல்லக்கூடிய நமது வலது கையின் சுண்டு விரலால் நெய்யினை தொட்டு, ஒவ்வொரு வெற்றிலையிலும் தடவ வேண்டும். அவ்வாறு தடவும் பொழுது உங்களுக்கு யார் யார் பணம் தர வேண்டுமோ அவர்களது பெயர்களை சொல்லி, எவ்வளவு பணம் தர வேண்டுமோ அதனையும் கூறி, கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக ஐந்து நெய் தடவிய 5 வெற்றிலைகளையும் ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்து, அதற்கு மேல் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து நூல் கொண்டு கட்டி விட வேண்டும். இதனை பூஜை அறையில் 5 நாட்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஆறாவது நாள் அதாவது திங்கள்கிழமை இந்த வெற்றிலைகளை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.
இதேபோன்று தொடர்ந்து 5 வாரம் செய்ய வேண்டும். ஐந்து வாரமும் வைத்த 5 ரூபாய் நாணயங்களை சேர்த்து வைத்து, நவகிரகங்கள் இருக்கும் கோவில்களுக்கு செல்லும் பொழுது அந்த கோவில் உண்டியலில் இந்த நாணயங்களை போட்டு விட வேண்டும். இந்த வழிபாட்டை நம்பிக்கையுடன் தொடர்ந்து 5 வாரம் செய்து வாருங்கள், நிச்சயம் உங்களது பணம் உங்கள் கைத்தேடி வந்துவிடும்.