எந்த மனிதனும் தான் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழுங்காலத்திலேயே தனக்கான தான தருமங்களைச் செய்து கொள்வது நல்லது. இந்து மதத்தில் எந்தெந்த செய்களில் ஈடுபட்டால் கர்மாவிற்கு புண்ணியம் சேரும், மற்றும் பாவம் சேரும் என்பது பற்றி பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. மேலும், முற்காலத்தில் இருந்தே, தனது தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதை விட புண்ணியம் சேர்ப்பது தான் அவசியம் என கருதினர்.
ஏழைகளுக்கு உணவு, உடை, கல்வி, மருத்துவம் போன்ற உதவிகள் அளிப்பது, தான தர்மங்கள் செய்வது, நல்ல செயல்கள் செய்வது போன்ற புண்ணிய செயல்கள் மூலம் பல தலைமுறைகளுக்கு நன்மை கிடைக்கும். அரசர் காலத்தில் எழுதப்பட்ட புராணங்கள் மற்றும் இலக்கியங்களில் நாம் இவற்றைப் பற்றிய தகவல்களை தெளிவாக காணலாம்.
நாம் உயிரோடு இருக்கும் பொழுதே ரத்த தானம், இறந்த பிறகு கண் தானம் மற்றும் உடல தானங்களையும் செய்யலாம். தானம் செய்வது என்பது இறைவன் நமக்கு கொடுத்த ஒரு மிகச் சிறந்த வாய்ப்பு. தானங்கள் செய்வதற்கு ஏற்றவாறு உடல்களை பேணிப் பாதுகாத்து வைத்துக் கொள்ள வேண்டும். மனதையும் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இந்த தானங்கள் செய்வது அவரவர் விருப்பம். அவரவர் எண்ணங்களை பொறுத்தது.
அந்த வகையில் ஒருவர் எந்தெந்த தானம் செய்தால், அவரது எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்வோம். நாம் சேர்த்து வைக்கக்கூடிய புண்ணியங்கள் நமது அடுத்த வம்சாவழி பரம்பரையை பேணி பாதுகாக்க உதவும்.
1. அன்னதானம் செய்து வந்தால் மூன்று தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
2. திருக்கோவில்களில் தீபம் ஏற்றினால் ஐந்து தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
3. பசி பட்டினியால் வாடும் ஏழை எளியவர்களுக்கு உணவளித்து வந்தால் ஐந்து தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
4. நிதி நெருக்கடி உள்ள ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தால் ஐந்து தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
5. பித்ருக்களுக்கு உதவி செய்தால் ஆறு தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
6. அனாதையாக இறந்தவர்களுக்கு
அந்திமகிரியை செய்தால் ஒன்பது தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
7. முன்னோர்களுக்கு தவறாமல் திதி மற்றும் பூஜைகளை செய்து வந்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும்.
8. பசுவை பேணிப் பாதுகாத்து அதன் உயிரை காப்பது 14 தலைமுறைக்கு புண்ணியத்தை தரும்.
இதுபோன்ற தானங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு தானங்களை நம்மால் செய்ய முடியும். இவ்வாறு தானம் செய்து புண்ணியத்தை நாம் வாழும் காலத்திலேயே சேர்த்து வைத்துக் கொண்டால், நமக்கும் அடுத்து வரக்கூடிய நமது சந்ததியினருக்கும் பெரும் பாக்கியத்தை அது கொடுக்கும். இதனால் நமது சந்ததியினர் சீரும் சிறப்புமாக வாழ்வார்கள்.