நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தாகவும் இருப்பதால் செல்வங்களில் வீடு முதன்மையாகக் கருதப்படுகிறது.
சிலருக்கு வீட்டுக்கு மேல் வீடு சேர்ந்து வருமானம் கொழிக்கும் வீட்டு உரிமையாளர் என்ற அந்தஸ்து கிடைக்கும். சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் பல்வேறு துன்பத்தில் உழன்று கிடப்பதும் நடக்கும்.உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் சொந்த வீடு யோகத்தைப் பெறலாம் என்கிறது சாஸ்திரம்.
சொந்தமாக வீடு வாங்க வேண்டும், இடம் வாங்க வேண்டும், வாகனம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அவர்கள் கையில் பணம் இருந்தாலும் செவ்வாய் பகவானின் அருள் இருந்தால்தான் இவற்றை வாங்க முடியும். இவை அனைத்திற்கும் அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானுக்கு அதிபதியாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அதனால் முருகப்பெருமானை வழிபாடு செய்ய நம்முடைய சொந்த வீடு வாங்கும் கனவு என்பது நிறைவேறும்.
பொதுவாக முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றால் முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். சொந்த வீடு வாங்க வேண்டும், சொந்தமாக இடம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வாஸ்து நாளில் முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபட விரைவிலேயே அவர்களுடைய கனவு நினைவாகும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நாட்களை மட்டும் தான் வாஸ்து நாள் என்று கூறுவோம். அந்த வாஸ்து நாளில் வீடு கட்ட ஆரம்பிப்பது, கடைக்கால் போடுவது, கிணறு தோன்றுவது, போர் போடுவது என்று பூமி தொடர்பான அனைத்து காரியங்களையும் நாம் செய்வோம்.
வாஸ்து நாள் அன்று வாஸ்து நேரம் என்று வரும். அந்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகனின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு சந்தனம் குங்குமம் வைத்து விட்டு அவருக்கு முன்பாக அரிசிமாவினால் ஒரு கோலத்தை போட்டுக் கொள்ளுங்கள். அது நட்சத்திர கோலமாக இருப்பது மிகவும் சிறப்பு. பிறகு அந்தக் கோலத்தின் நான்கு மூலைகளிலும் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி தீபம் ஏற்றிய பிறகு உங்களுடைய வேண்டுதல் என்னவோ அதாவது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற வேண்டுதலை முருகப்பெருமானிடம் மனதார வைத்துக் கொள்ளுங்கள். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.
இதேபோன்று சில எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமும், சொந்த வீடு அமையும் யோகத்தினை பெற முடியும்.
1.நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வந்து வணங்கினால் வீடு யோகம் வரும்.
2.துவரம் பருப்பை தானம் செய்பவர்களுக்கு செவ்வாய் அருள் கிடைக்கும். ஆகவே சொந்த வீட்டை உடனடியாக கட்டலாம்.
3.ஒன்பது செவ்வாய்க்கிழமைகள், தொடர்ந்து சிறுவாபுரி முருகன் கோயில் சென்று வழிபட வேண்டும்.
4.வலம்புரி சங்கை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்கும். அதோடு வாடகை வீட்டில் இருந்தால் உடனடியாக சொந்த வீட்டிற்கு மாறிடலாம்.
5.புல்லாங்குழலை வீட்டில் வைப்பதன் மூலம் அதிர்ஷ்டம் பெருகும். சொந்த வீடு வாங்கவும், சொந்த வீட்டில் வசிப்பவர்களும் மகிழ்ச்சியோடு இருக்கவும் இது உதவும்.