என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Photo of author

By Parthipan K

என்ன தடுப்பூசியின் செயல்திறன் குறைகிறதா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. சுமார் இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் பலவற்றில் இந்த கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எனவே, கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.

உலக நாடுகள் பலவற்றிலும் இந்த வைரஸ் குறுகிய காலத்தில் வேகமாக பரவத் தொடங்கியது. இதன் காரணமாக மூன்றாவது டோஸாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறன் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செயல்திறன் நான்கு மாதத்தில் கணிசமாக குறைகிறது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நோய் கட்டுபாடு மற்றும் தடுப்பு மையம் நடத்திய ஆய்வில் தெரிவித்திருப்பதாவது:-

பைசர் மற்றும் மாடர்னா நிறுவன தடுப்பூசிகளின் மூன்றாவது டோசின் செயல்திறன் நான்காவது மாதத்தில் குறைந்து விடுகிறது. கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவிய காலத்தில் அவசர சிகிச்சைகளுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் மூன்றாவது டோசுக்கு பிறகு இரண்டு மாதங்களில் 87 சதவீதமாக இருந்தது.

ஆனால் நான்காவது மாதத்தில் செயல்திறன் 66 சதவீதமாக குறைந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் முதல் இரண்டு மாதங்களில் 91 சதவீதமாக இருந்தது. ஆனால் மூன்றாவது டோசுக்கு பிறகு நான்காவது மாதத்தில் 78 சதவீதமாக குறைந்தது என்று கூறப்பட்டுள்ளது.