குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்க கூடாது என்று கூறுவார்கள். குலதெய்வத்தின் வழிபாடு என்பது கோடி தெய்வங்களின் வழிபாட்டுக்கு சமமாகும். “சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்தை மிஞ்சிய தெய்வமும் இல்லை” என்ற பழமொழிகளும் உள்ளது. குலதெய்வத்தை வணங்கினால் கோடி நன்மைகள் நம்மை தேடி வரும்.
குலதெய்வத்தால் செய்ய முடியாத காரியம் என்று எதுவும் கிடையாது. எமன் கூட நமது குலதெய்வத்தின் அனுமதியை பெற்ற பிறகு தான், நமது உயிரை எடுக்க முடியும். உங்களுடைய வம்சத்தை காக்க முதலில் ஓடி வரக்கூடிய தெய்வமும் குலதெய்வம் தான். எனவே குலதெய்வத்தை வணங்குவது என்பது இத்தனை நன்மைகளை நமக்குத் தேடித் தரும்.
வாழ்வில் தொடர்ந்து கஷ்டங்களையே சந்திப்பவர்கள், தங்கள் கஷ்டங்களுக்கான தீர்வை நாடி மகான்களையோ, ஜோதிடர்களையோ அணுகினால் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும் பதில் குலதெய்வத்தைக் கும்பிடுங்கள் என்பதுதான். ஆனால் இவர்களுக்கு தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாமலே இருப்பதுதான் ஆச்சர்யமான விஷயம்.
இறுதியாக அவர்கள் தங்கள் குலதெய்வம் எது என்று தேட ஆரம்பிப்பார்கள். சொந்த ஊர் சென்று பழைய மனிதர்களைச் சந்தித்தால் சிலருக்கு விடை கிடைத்துவிடும். ஆனால் பலருக்கு அந்த வாய்ப்பும் இருக்காது. அப்படிக் குலதெய்வம் தெரியாதவர்கள் தங்கள் குலதெய்வத்தைக் கண்டுபிடித்துக் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது எப்படி? என்பது குறித்து தற்போது காண்போம்.
1.பரம்பரையில் இருந்தவர்களின் பெயர்களை ஆராய்தல்:
பொதுவாகக் குலதெய்வத்தின் பெயர்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு வைக்கும் வழக்கம் உண்டு. உங்கள் குடும்பத்தின் தாத்தா, தாத்தாவின் அப்பா ஆகியோரின் பெயரைத் தெரிந்துகொள்ள முயலுங்கள். பொதுவாக அழைக்கும் பெயர் ஒன்றாகவும் ஜாதகப் பெயர் ஒன்றாகவும் இருக்கும். காரணம் பெயர்கள் வழிவழியாக வருபவை என்பதால் பெரும்பாலும் ஜாதகப் பெயர் குலதெய்வத்தின் பெயராக இருக்கும்.
2.தேடினால் கிடைக்கும் தெய்வம்:
பொதுவாகக் குலதெய்வத்தை நாம் மறந்திருந்தாலும் குலதெய்வம் நம்மை மறப்பதில்லை. நமக்காக அது காத்திருக்கும். எப்படிப் பெற்றோர் பிள்ளைகளைத் தேடிக் காத்திருப்பார்களோ, அப்படிக் காத்திருக்குமாம் குலதெய்வம். அதனால் தன்னை மறந்து வாழும் தன் பிள்ளைகள் தன்னைத் தேடினாலேயே உடனே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளுமாம்.
வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு இட்டுக் கொண்டு, ஒரு ஐந்து முகக் குத்து விளக்கு ஏற்றி, அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி (வஸ்திரம்) சாத்தி, பூ சுற்றி அதற்கு முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தீபம், தூபம் காட்டி, “எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம். ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து, தங்களையே அவராகப் பாவித்து, இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம்.
இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு சீக்கிரமாக எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக” என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்குத் தெரியவரும்.
3.தியானம் செய்தால் தரிசனம் கிடைக்கும்:
குத்துவிளக்கின் முன்பாகக் கண்மூடி தியானம் செய்தால் குல தெய்வம் சிலருக்கு மனக்கண்ணில் தோன்றும்.சிலருக்கு ஓரிரு நாள்களிலேயே இந்த தரிசனம் கிட்டிவிடும். சிலருக்கு மாதக் கணக்கில் கூட ஆகலாம்.
அப்படியும் குலதெய்வத்தை அறிந்துகொள்ள முடியவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை.
புதிய காமாட்சி விளக்கொன்றை வாங்கி அதை சந்தன குங்குமம் இட்டு அலங்கரித்து பூ சூட்டி விளக்கேற்றி அதையே குலதெய்வமாகக் கருதி வணங்கலாம். நம் குலதெய்வம் அதில் வந்து வாசம் செய்து வழிகாட்டும்.
4.ஜாதகத்தை வைத்துக் குலதெய்வம்:
ஒருவரது ஜாதகத்தில் தெய்வ ஸ்தானம் என்பது 5-ம் இடமும் 9-ம் இடமும் ஆகும். 5-ம் இடம் பூர்வ புண்ணியஸ்தானம். தந்தை வழி பாட்டனார்களைச் சொல்லுமிடம். அதன் 5-ம் இடம் ஜாதகத்தின் 9-ம் பாவமாகும். அவர்களின் இஷ்ட தேவதையைச் சொல்லுமிடம். இந்த இரு இடங்களைக் கொண்டு குல தெய்வத்தைக் கண்டுபிடிக்கலாம்.
நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் இருக்கும். நில ராசியில் நின்றால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், மலை மேல் இருக்கும். இவ்வாறு குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின் ஜாதகத்தைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்.
5.தவிர்க்கக் கூடாத தலைவாசல் பூஜை:
வீட்டின் தலை வாசலில் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டுப் புதுத் துணி சாத்தி, வெற்றிலை பாக்கு, பழம், பொங்கல் வைத்து நிவேதனம் செய்து பூஜை செய்து வேண்டிக் கொண்டால், உங்கள் குல தெய்வம் பற்றிய தகவல் நம் வீடுதேடிவரும்.