ஒவ்வொரு வருடமும் நாம் எந்த ஒரு நாளை வேண்டுமானாலும் தவற விடலாம். ஆனால் இந்த அட்சய திருதியை நாளை மட்டும் தவற விடக்கூடாது. நம்மிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் வளர்ந்துக் கொண்டே போக வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் இந்த அட்சய திருதியை நாளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருடா வருடம் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி தான் அட்சய திருதியை. இந்த நாள் செல்வ செழிப்பை அதிகப்படுத்தக்கூடிய ஒரு அற்புதமான நாளாகும். “அட்சய” என்பதற்கு ‘அல்ல அல்ல குறையாதது’ என்று அர்த்தம். அட்சய பாத்திரத்தில் இருக்கக்கூடிய எந்த ஒரு பொருளும் தீர்ந்து விடாமல் இருந்து கொண்டே இருக்கும்.
அத்தகைய அட்சய பாத்திரத்திற்கு நிகரான ஒரு நாள் தான் இந்த அட்சய திருதியை. எனவே தான் இந்த நாளில் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. அட்சய திருதியை அன்று மகாலட்சுமி தாயை வணங்குவதும் மிகவும் அவசியம். அதேபோன்று மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி குபேரர் வழிபாடும் மிகவும் அவசியம்.
தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை மற்ற நாட்களில் வாங்குவதை விட அட்சய திருதியை அன்று வாங்கினால் அந்தப் பொருள் மென்மேலும் பெருகும் என்று அர்த்தம். அதேபோன்று தான் அந்த நாளில் செய்யக்கூடிய செயல்கள், பேசக்கூடிய வார்த்தைகள் ஆகிய அனைத்திற்குமே பொருந்தும்.
அட்சய திருதியை அன்று வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை காட்டிலும், அன்று பேசக்கூடிய வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும். அதாவது மற்றவர்களிடம் கோபமாகவோ, தேவையற்ற வார்த்தைகளையோ பேசுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
அட்சய திருதியை என்பது அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஒரு நாள். இத்தகைய நாளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது எதிர்மறையான விளைவுகளை நமக்கு ஏற்படுத்தும். எந்தெந்த செயல்களை அட்சய திருதியை அன்று செய்யக்கூடாது என்பது குறித்து தற்போது காண்போம்.
1.அட்சய திருதியை அன்று கடன் வாங்கவும் கூடாது, கடன் கொடுக்கவும் கூடாது.
2. யாராவது ஒருவர் உங்களிடம் வந்து யாசகம் கேட்டால் அதாவது பணம், உணவு இது போன்றவற்றை கேட்டால் இல்லை என்று சொல்லக்கூடாது. அட்சய திருதியை அன்று தானம் வழங்கினால் மிகுந்த பலன்களை அள்ளித் தரும்.
3. அட்சய திருதியை அன்று அசைவ உணவுகளை உட்கொள்ளக் கூடாது. அதேபோன்று மது அருந்துதலும் கூடாது.
4. தீய சொற்களை பேசுவது கூடாது. அடுத்தவர்களுக்கு தீமை செய்வது மற்றும் சண்டையிடுவது போன்ற செயல்களை செய்யக் கூடாது.
5. வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது. அதேபோல் வீட்டை இருளாக வைத்திருக்கக் கூடாது.
6. அட்சய திருதியை அன்று குளிக்காமல், அழுக்கான ஆடைகளுடன் இருக்கக் கூடாது.
7. அட்சய திருதியை அன்று ஏதேனும் ஒரு பொருளை வாங்க சென்று, எதுவும் வாங்காமல் வெறுமனே வீடு திரும்பக் கூடாது.அப்படி எதுவும் வாங்க முடியாதவர்கள் பூ, மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களையாவது வாங்கி வர வேண்டும்.
8. விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் தனித்தனியாக வணங்க கூடாது.
அட்சய திருதியை அன்று இந்த செயல்களை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்காது. ஆகையால் இது போன்ற செயல்களை நீங்களும் செய்யாதீர்கள், மற்றவர்களையும் செய்ய விடாதீர்கள்.