நிலை வாசலில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!! வீட்டில் மகாலட்சுமி தங்க நிலை வாசலில் இதை மட்டும் செய்யுங்கள்..!!

Photo of author

By Janani

நிலை வாசலில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!! வீட்டில் மகாலட்சுமி தங்க நிலை வாசலில் இதை மட்டும் செய்யுங்கள்..!!

Janani

ஒரு வீட்டை கட்டும் பொழுது முதன்முதலாக பூமி பூஜை செய்வது உண்டு. அதற்கு அடுத்ததாக நிலை வாசல் வைக்கும் பொழுது தான் பூஜை செய்வார்கள். வாசலுக்கு அத்தகைய ஒரு மகிமை உண்டு. தலைவாசல் என்பது வீட்டின் உயிர்மூச்சு போன்றது. அதனால் தான் அந்த இடத்தில் தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.

மகாலட்சுமி நமது வீட்டில் அடி எடுத்து வைக்க நிலை வாசலில் நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதது என்ன? என்கிற ஆன்மீகம் சார்ந்த ரகசியங்களை இந்த பதிவில் காண்போம்.

ஒரு வீட்டில் முதலில் பிரதானமாக நாம் பார்க்க வேண்டியது நிலை வாசலை தான். இதை எந்த அளவிற்கு சுத்த பத்தமாக வைத்திருக்கிறோமோ, அந்த அளவிற்கு நம்மிடம் செல்வ வளமும், நிம்மதியும் இருக்கும் என்கிறது சாஸ்திரங்கள். பெரிய பெரிய வீடுகளில் எல்லாம் நிலை வாசலுக்கு அதிகப்படியான முக்கியத்துவத்தை கொடுப்பார்கள்.

அந்த காலம் முதல் இன்று வரை தலைவாசலில் மஞ்சள் குங்குமம் இட்டு, விளக்கு ஏற்றும் பழக்கம் உண்டு. தலைவாசலில் குலதெய்வ வாசம் உண்டு என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. அதனால்தான் கதவின் மீது ஏறி நின்று விளையாடுவது கூடாது. கதவின் தாழ்பால் கீச் கீச் என்று சத்தம் வரக்கூடாது. அதை உடனடியாக எண்ணெய் விட்டு சரி செய்ய வேண்டும்.

அந்த அளவிற்கு முக்கியத்துவம் தர வேண்டிய இந்த நிலை வாசலில் மஞ்சள் வைத்து தான் குங்குமம் வைக்க வேண்டும். சிலர் சந்தனம் வைத்து குங்குமம் வைப்பது உண்டு. சந்தனம் என்பது ஆண் தெய்வங்களுக்கு உரியது. ஆஞ்சநேயர், விநாயகர், முருகர் போன்ற தெய்வங்களுக்கு உரிய இந்த சந்தனத்தை நிலை வாசலில் வைக்க கூடாது.

மகாலட்சுமியை வரவேற்கவே தலை வாசலில் மஞ்சள் வைக்கப்படுகிறது. மஞ்சள் வைத்து குங்குமம் இட்டு, இரண்டு புறமும் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கினை தரையில் வைத்து ஏற்றக்கூடாது.

தலைவாசலில் ஏற்றக்கூடிய விளக்கானது சிலர் பரம்பரை பரம்பரையாக ஏற்றி வரும் விளக்காக இருக்கும். அவ்விளக்குகள் இல்லாவிட்டால் அகல் விளக்குகளில் மட்டும் தீபம் ஏற்றி வழிபடலாம். மண் அகல் விளக்கு இயற்கையால் உருவாகக்கூடியது. எனவே அதற்கு தனித்துவம் வாய்ந்த சக்திகள் உண்டு. இதற்கு தோஷங்கள் எதுவும் கிடையாது.

தீட்டு உள்ளவர்கள் தீட்டு காலங்களில் நிலை வாசலில் விளக்கு வைக்க கூடாது. வீட்டில் வேறு யாராவது விளக்கு வைத்து ஏற்றினால், தீட்டு உள்ளவர்கள் வாசலை தாண்டி செல்லக்கூடாது. அதனால் அந்த நாட்களில் நிலை வாசலில் விளக்கு ஏற்றாமல் இருப்பது நல்லது.

ஆண்களாக இருப்பினும் கோவணம் அணியாமல் நிலை வாசலை தாண்டி செல்லக்கூடாது. இது மிகப்பெரிய பாவம் ஆகும். வீட்டில் நீங்கள் வேறு எந்த ஒரு விளக்கை ஏற்றினாலும் வத்திக்குச்சியால் ஏற்றுவதை விட, அகல் விளக்குகளில் முதலில் ஏற்றிவிட்டு அந்த அகலினை கொண்டு மற்ற விளக்குகளை ஏற்றுவது தான் முறையாகும்.

இது மிகச் சிறந்த பலன்களை கொடுக்கும். அத்தகைய மகத்துவம் வாய்ந்த அகல் விளக்குகளை தினந்தோறும் தலைவாசலில் வைத்து விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால், மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும். தினமும் இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை மற்றும் குபேரர் வாசம் செய்யக்கூடிய வியாழன் கிழமைகளில் ஏற்றலாம்.

இதனால் வாழ்க்கையில் நிம்மதியும், செல்வ வளமும் அதிகரிக்கும். நிலை வாசலின் வழியாகத்தான் நமது குடும்பத்திற்குள் நல்லதும் வரும், கெட்டதும் வரும். உங்கள் வீட்டின் நிலை வாசல் கதவை இந்தத் தண்ணீரைக் கொண்டு வாரத்தில் ஒரு நாள் இப்படி துடைத்து வந்தாலே போதும்.

வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலோ, துன்பங்களோ, துக்கமோ, கஷ்டமோ, கண் திருஷ்டியோ, கடனோ நுழைவதற்கு வாய்ப்பே கிடையாது. ஒரு கிண்ணத்தில் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக பச்சை கற்பூரம், இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறு, இரண்டு வேப்ப இலைகளை போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மயிலிறகை எடுத்துக் கொள்ளுங்கள்.

மயிலிறகு கொத்தாக இருந்தாலும் பரவாயில்லை. இந்த தண்ணீரை உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு குலதெய்வத்தை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். “கால பைரவரே நீங்கள் எங்களது வீட்டிற்கு காவல் தெய்வமாக நிற்க வேண்டும்” என்று கண்களை மூடி வேண்டிக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த மயில் இறகை அந்த தண்ணீரில் தொட்டு உங்களுடைய நிலைவாசல் கதவை, மேல்பக்கத்திலிருந்து கீழ்ப்பக்கம் வரை துடைத்து விட வேண்டும். இதே போல ஐந்து முறை இந்த மயிலிறகை அந்த தண்ணீரில் தொட்டு தொட்டு கதவை வருடிவிடவும். வாரத்தில் ஒரு நாள் இவ்வாறு செய்தால் உங்களது காவல் தெய்வம் உங்கள் நிலை வாசலில் குடியேறும்.

குலதெய்வமும் குடியேறும். வீட்டிற்குள் எந்த கெட்டதையும் நுழைய விடாது. இவ்வாறு செய்வதற்கு முன்பு நிலை வாசல் கதவில் உள்ள தூசிகளை ஒரு துணியால் துடைத்து விட வேண்டும். கதவுக்கும் நிலை வாசலுக்கும் மஞ்சள் குங்குமம் போட்டு, நிலை வாசலுக்கு முன்பாக கோலம் மற்றும் பூக்களை போட்டு, நிலை வாசலை நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் அந்தத் தண்ணீரால் கதவை துடைக்க வேண்டும்.