எங்க வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க.. சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக களத்தில் இறங்கிய காங்கிரஸ்!!

Photo of author

By Rupa

எங்க வேட்பாளருக்கு ஓட்டு போடாதீங்க.. சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக களத்தில் இறங்கிய காங்கிரஸ்!!

தேர்தலில் தனது கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் அல்லது தங்களது கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வது தானே வழக்கம். ஆனால் இங்கு தனது சொந்த கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென கூறி எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

இந்த சம்பவம் ராஜஸ்தானில் தான் நடந்து வருகிறது. அங்குள்ள பன்ஸ்வாரா – துங்கர்பூர் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சியினர் அரவிந்த் என்பவரை கட்சி சார்பாக வேட்பாளராக அறிவித்தனர். பின்பு அரவிந்த் வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டார். ஆனால் அதன் பின்னர் தான் இதில் பெரிய திருப்பமே ஏற்பட்டுள்ளது.

அதாவது அரவிந்த் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர், பன்ஸ்வாரா தொகுதியில் உள்ள பழங்குடியினர் நலனுக்காக பாடுபடும் பாரத் ஆதிவாசி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. உடனே காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான அரவிந்திடம் வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு கட்சி தலைமை கேட்டுள்ளது.

ஆனால் அதை மறுத்த அரவிந்த் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்து விட்டார். இதனால் தற்போது அந்த தொகுதியில் காங்கிரஸ், பாஜக மற்றும் பாரத் ஆதிவாசி ஆகிய 3 கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி அவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப்போட வேண்டாமென கூறி வருகிறதாம்.

அதற்கு பதிலாக பாரத் ஆதிவாசி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு கூறி அவர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இருப்பினும் அரவிந்த் கணிசமான வாக்குகளை பெற்று இந்த தொகுதியில் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.