நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை! ராமதாஸ் வேண்டுகோள்

Photo of author

By Parthipan K

நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை! ராமதாஸ் வேண்டுகோள்

 

சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடும் போதே அடுத்தடுத்த விபத்துகள் நடைபெறுவது மக்கள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதில்லை என்பதையே உணர்த்துக்கிறது.இதனால் நெடுஞ்சாலை விபத்துகளைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் தேவை என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

 

தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சென்னை & திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த நாட்களில் இரு கோர விபத்துகள் நிகழ்ந்து 9 பேர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த விபத்துகளுக்கு மனிதத் தவறுகள் தான் காரணம் என நன்றாகத் தெரியும் நிலையில், தவறுகளை திருத்திக்கொள்ள மக்கள் முன்வராவிடில் மோசமான விளைவுகளை ஏற்படக்கூடும்.

 

கள்ளக்குறிச்சியிலிருந்து கடந்த திங்கள் கிழமை சென்னை நோக்கி வந்த மகிழுந்து திண்டிவனத்தை அடுத்த பாதிரி என்ற இடத்தில் சாலையோர மரத்தில் மோதியதில் அதில் பயணித்த 4 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகத்தை அடுத்த படாளம் என்ற இடத்தில் நேற்று, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்குந்து மீது மகிழுந்து மோதியதில் அதில் பயணித்த 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த இரு விபத்துகளும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்னைக்கும், திண்டிவனத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நடந்தவை தான். இதே போல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இன்னும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும்.

 

தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி முதல் பிப்ரவரி 17-ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளைக் குறைக்கவும், சாலை விபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் சாலைப் பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், சாலைப் பாதுகாப்பு மாதம் கொண்டாடும் போதே அடுத்தடுத்து விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றால், சாலைப் பாதுகாப்பு விதிகளையும், விழிப்புணர்வு பரப்புரையையும் எந்தளவுக்கு நாம் மதிக்கிறோம்? என்ற வினா எழுகிறது. இவ்வினாவுக்கு விடையளிக்க வேண்டியவர்கள் நாம் தான்.

 

‘‘நெடுஞ்சாலைகளில் பயணம் என்பது இலக்கை நோக்கியதாக இருக்க வேண்டும்; இறப்பை நோக்கியதாக இருந்து விடக்கூடாது’’ என்று நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். ஆனால், தேசிய நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் வாகனங்கள் பறக்கும் வேகத்தையும், கண் முன்பே நடக்கும் விபத்துகளையும் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது. அதிநவீன வாகனங்கள் பெருகிவிட்ட நிலையில், அவற்றின் முழு வேகத் திறனையும் அனுபவித்துப் பார்த்து விட வேண்டும் என்று சாகச உணர்வுமிக்க இளைஞர்கள் துடிப்பது தான் இத்தகைய விபத்துகளுக்கு காரணமாகும்.

 

மகிழுந்துகளைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் அதிகபட்சமாக அனுமதிக்கப்படும் வேகம் 130 கி.மீ மட்டுமே. அமெரிக்காவிலும் இதே அளவு தான். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மட்டும் ஒரு சாலையில் 137 கி.மீ வேகம் அனுமதிக்கப்படுகிறது. ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் வேக உச்சவரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் கூட, அங்கு பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் வேகம் மணிக்கு 120&130 கி.மீ. மட்டும் தான். உலகிலேயே மகிழுந்துகளுக்கு அதிகபட்ச வேகத்தை அனுமதிக்கும் நாடு ஐக்கிய அரபு எமிரேட் தான். அங்கு சில சாலைகளில் மட்டும் 160 கி.மீ வேகம் அனுமதிக்கப் படுகிறது. அதே நேரத்தில் மற்ற சாலைகளில் 100 கி.மீ வேகம் மட்டுமே நடைமுறையில் உள்ளது.

 

சிங்கப்பூரில் மணிக்கு 90 கி.மீக்கு கூடுதலான வேகம் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் 150 கிமீ முதல் 180 கி.மீ வேகத்தில் வாகனங்கள் பறப்பதைப் பார்க்க முடியும். இதைக் கட்டுப்படுத்தாமல் வாகன விபத்துகளைத் தடுக்க முடியாது. இதைத் தடுக்க தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் வேகத்தை அளவிடும் காமிராக்களைப் பொறுத்தி அதிவேகமாக செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து, கடுமையாகத் தண்டிக்க வேண்டும். அதிக வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் உரிமங்களை ரத்து செய்தல், வாகன உரிமையாளர், வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

 

பெரும்பான்மையான சாலைவிபத்துகள் அதிகாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை தான் நிகழ்கின்றன. இந்த நேரத்தில் பொதுப்போக்குவரத்து தவிர பிற போக்குவரத்தை தடை செய்வதன் மூலம் பெரும்பான்மையான சாலை விபத்துகளை தடுக்க முடியும். இதைக் கருத்தில் கொண்டு அதிகாலை வேளையில் மற்ற போக்குவரத்தை தடை செய்வது, தவிர்க்க முடியாமல் பயணம் செய்ய வேண்டுமென்றால் சிறப்பு அனுமதி பயணம் செய்ய அனுமதிப்பது, அத்தகைய சிறப்பு அனுமதி பெறுவதற்கு கணிசமான சிறப்புக் கட்டணம் செலுத்துவது போன்ற ஏற்பாடுகளை செய்யலாம். அதேபோல், வாகனங்களின் முன் இருக்கையில் பயணிப்பவர்கள் உறங்குவதை தவிர்க்க வேண்டும். அதிகாலை விபத்துகளைக் குறைக்க இது உதவும்.

 

வெளிநாடுகளில் ஏதேனும் ஒரிடத்தில் அடிக்கடி விபத்து நடந்தால், அதற்கான காரணத்தை ஆய்வு செய்து கண்டுபிடிக்கும் அதிகாரிகள், அக்குறையை உடனடியாகச் சரி செய்கின்றனர். வெளிநாடுகளில் ஒவ்வொரு நெடுஞ்சாலைக்கும் விபத்து வரலாறு பதிவேடு பராமரிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் சாலை விபத்துகள் கட்டுப்படுத்தப்படுவதற்கு இதுவே காரணமாகும். ஆனால், நமது நாட்டில் ‘இது விபத்துப் பகுதி’ என்று அறிவிப்புப் பலகை வைத்து விட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இந்த வழக்கத்தைக் கைவிட்டு, விபத்துப் பகுதிகளில் உள்ள குறைகளைச் சீரமைத்து, அதில் சாலைவிபத்துகள் நடக்காமல் தடுக்க வேண்டும். இதை காவல்துறை உடனடியாக செய்ய வேண்டும்.

 

உலகில் விலைமதிப்பற்றது மனித உயிர்கள் ஆகும். சாகச மனநிலை, அலட்சியம் ஆகியவற்றுக்கு அடிமையாகி, விபத்துகளை ஏற்படுத்தி மனித உயிர்கள் பறிபோவதற்கு காரணமாக இருக்கக் கூடாது. எனவே, நிதானமான வேகத்தில் பயணம், அதிகாலை நேரத்தில் பயணம் செய்யாமை, சாலைகளில் விபத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து நீக்குதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்வதன் மூலம் தமிழக நெடுஞ்சாலைகளை விபத்தில்லா சாலைகளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.