அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

Photo of author

By Parthipan K

அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை

பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை உயரத்தை அதிகரிக்கும் ஆந்திரா அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தி எச்சரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக விவசாயிகள் நலனுக்கும், இரு தரப்பு நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்திற்கும் எதிரான ஆந்திர அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

வேலூர் மாவட்டத்தையொட்டிய ஆந்திரத்தில் பாலாறு கிராமத்திற்கு அருகில் கங்குந்தி என்ற இடத்தில் உள்ள தடுப்பணையின் உயரத்தை இப்போதுள்ள 22 அடியிலிருந்து 40 அடியாக உயர்த்தும் பணிகளை ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இந்த பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருபுறம் தடுப்பணையை உயர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மற்றொருபுறம் அணைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆற்றை தூர்வாரி அதிக அளவு நீரை தேக்குவதற்கான நடவடிக்கைகளையும் ஆந்திர அரசு செய்து வருகிறது.

கங்குந்தி பகுதியில் தடுப்பணை கட்ட ஆந்திர அரசு எந்த அனுமதியும் பெறவில்லை. தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கு முன் ஏழரை அடி உயரத்தில் தடுப்பணை கட்டிய ஆந்திரம், கடந்த 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அணையின் உயரத்தை 22 அடியாக உயர்த்தியது. இப்போது அடுத்தக்கட்டமாக 40 அடி உயரத்திற்கு உயர்த்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

கங்குந்தி தடுப்பணை மட்டுமின்றி, ராமகிருஷ்ணாபுரம், சாந்திபுரம், போகிலிரே, கிடிமாணிபெண்டா உள்ளிட்ட இடங்களில் உள்ள தடுப்பணைகளின் உயரமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் உருவாகி தமிழகத்தில் நீண்ட தொலைவுக்குப் பாயும் பாலாறு, இடைப்பட்ட மாநிலமான ஆந்திரத்தில் வெறும் 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே பாய்கிறது. ஆனால், அந்த 33 கி.மீ தொலைவுக்குள் 21 தடுப்பணைகளை ஆந்திர அரசு கட்டியிருக்கிறது. அவ்வாறு கட்டப்பட்டுள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தையும் உயர்த்த ஆந்திரம் திட்டமிட்டிருப்பதாகவும், இப்பணிகளுக்காக ரூ.43 கோடியை ஆந்திர அரசு ஒதுக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு மிகப்பெரிய தீங்காக அமைந்து விடும்.

பாலாற்று நீரை பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக் கூடாது.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகளை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் கடந்த ஆண்டு இறுதியில் உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 14&ஆம் தேதி அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஜூலை மாதத்தில் இறுதி விசாரணையை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாத இறுதியிலோ, அடுத்த மாதத் தொடக்கத்திலோ பாலாறு தடுப்பணை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பது உச்சநீதிமன்ற அவமதிப்பு ஆகும்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதத் தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசின் கவனமும், அரசியல் கட்சிகளின் கவனமும் தேர்தலில் தான் இருக்கும்; இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஆந்திர அரசு இவ்வாறு செய்கிறது. ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, சட்டமன்றத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பதவி விலகியுள்ள நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ளது.

பதவியேற்ற இரு மாதங்களுக்குள்ளாகவே, சட்டவிரோதமாக கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை சட்டவிரோதமாக உயர்த்துகிறது என்றால், பாலாற்று நீர்ப்பகிர்வு குறித்த இருதரப்பு ஒப்பந்தங்களையோ, இருதரப்பு நல்லுறவையோ எள் முனையளவுக்கு கூட ஆந்திரத்தின் புதிய அரசு மதிக்கவில்லை என்று தான் பொருளாகும். இது தமிழகத்திற்கு பெரும் ஆபத்தாக அமையும்.

மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை

ஆந்திர அரசின் இந்த அத்துமீறலை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இது தொடர்பாக ஆந்திர அரசை கண்டிப்பதுடன், தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளை உடனடியாக கைவிடாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.