“வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தது!” – அன்புமணி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மகன் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராமதாஸ் தனது மகன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, கட்சியில் நிலவும் பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களையும் வெளிப்படுத்தினார்.

முக்கிய குற்றச்சாட்டுகள்:

அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக பரிந்துரைத்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணிக்கு தலைமைப் பண்பே இல்லை என்றும், மேடை நாகரிகம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.

புதுச்சேரி பொதுக்குழுவில் அன்புமணி மேடையில் மைக்கை தூக்கி டேபிளில் வீசியது போன்ற செயல்களை மேற்கொண்டதாக ராமதாஸ் தெரிவித்தார்.

அன்புமணி, தனது தாயை குடிநீர் பாட்டிலால் தாக்க முயற்சித்ததாகவும், அது சுவரில் பட்டதால் அவர் மீது படாமல் தவிர்க்கப்பட்டது என்றும் கூறினார்.

முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞரணித் தலைவராக நியமித்ததை அன்புமணி எதிர்த்ததாகவும், அவரது நியமன கடிதத்தை கிழித்து போட்டதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

அன்புமணி, மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்கு யாரும் வரக்கூடாது என கூறி தனித்தனியாக போனில் பேசியதாகவும், அதனால் 108 மாவட்ட தலைவர்களில் 8 பேர் மட்டுமே வந்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.

வன்னியர் சங்க மாநாடு முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் பலர் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களை ஓய்வெடுக்க வலியுறுத்தி வந்த நிலையில் ராமதாஸ் அவர்களின் இந்த பேட்டியானது விவகாரத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் அன்புமணியின் பதில்கள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து என்ன நடக்கும் என கட்சியின் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.