ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணி! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்
நாளுக்கு நாள் புவி வெப்பமயமாதலின் தாக்கமும்,அதனால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தும் அதிகரித்து கொண்டே இருக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அச்சுறுத்தும் புவிவெப்பமயமாதல்: இந்தியா
விழித்துக்கொள்ள புதிய வேண்டுகோள்! என்ற தலைப்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.
புவிவெப்பமயமாதலின் தாக்கமும், அதனால் மனிதகுலத்திற்கு ஏற்படவிருக்கும் ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பாங்காக் காலநிலை மாநாடு மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளது. இது ஆசிய நாடுகளுக்கு அடிக்கப்பட்ட அபாயமணியாகவே தோன்றுகிறது.
புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவை தடுப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்து, அறிவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு காலநிலை மாநாடு வரும் 23 ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது. அம்மாநாட்டுக்கு ஆயத்தமாவதற்காக கானா, பிரேசில், தாய்லாந்து ஆகிய நாடுகளில் மண்டல மாநாடுகள் நடத்தப்படும் என்று ஐ.நா. அமைப்பு அறிவித்திருந்த நிலையில், ஆசிய – பசுபிக் மண்டலத்திற்கான மாநாடு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் கடந்த 2ஆம் தேதி தொடங்கி இன்று நிறைவடைகிறது.
புவிவெப்பமயமாதலுக்கு ஆசிய பசுபிக் நாடுகள் இதுவரை முதன்மைக் காரணமில்லை என்றாலும், இனி வரும் காலங்களில் இந்த நாடுகளில் இருந்து தான் அதிக அளவில் மாசுக்காற்று வெளியாகும். அதுமட்டுமின்றி, புவிவெப்பமயமாதலால் இந்நாடுகள் தான் மிகக்கடுமையான பேரழிவுகளை சந்திக்கும். புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டிய இந்தியாவும் இம்மண்டலத்தில் தான் உள்ளது என்பதால் இம்மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்துவதற்கான மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன. அரசு பிரதிநிதிகள், அதிகாரிகள், பன்னாட்டு அமைப்புகள், வங்கிகள், அரசு சாரா அமைப்புகள் சார்பிலான பிரதிநிதிகள் பங்கேற்ற இம்மாநாட்டில் தமிழகத்திலிருந்து நான் உருவாக்கிய பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் அதன் செயலாளர் இர. அருள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா போன்ற நாடுகள் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியே விரிவாகவும், அழுத்தமாகவும் விவாதிக்கப்பட்டன.
மாநாட்டில் பேசிய ஐ.நா காலநிலை பிரிவு துணை செயலரும், இந்தியருமான ஓவைஸ் சர்மத் ‘‘பாரிஸ் காலநிலை உடன்பாட்டின் இலக்குகளை முழுமையாக நிறைவேற்றினால் கூட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகும். இதனால் பயன் கிடைக்காது. மாறாக, உலகநாடுகள் அனைத்தும் இணைந்து வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களை செப்டம்பர் 23 ஐநா மாநாட்டில் வெளியிட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். இதற்கான நடவடிக்கைகளை தங்களின் அமைப்புகள் சமரசமின்றி மேற்கொள்ளும் என தாய்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் வராவுட் சில்பா ஆர்ச்சா (Varawut Silpa-archa), ஆசிய- பசிபிக் மண்டலத்திற்கான ஐ.நா. சமூக, பொருளாதார ஆணைய செயலர் அர்மிடா அலிஸ்ஜபானா (Ms. Armida Alisjahbana) ஆகியோர் உறுதியளித்தனர்.
தாய்லாந்தில் நடைபெற்ற இந்த மாநாடும், நியூயார்க்கில் இம்மாதம் 23-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு காலநிலை மாநாடும் கூடிக்கலையும் தன்மை கொண்டவையோ, உலகத் தலைவர்கள் சுற்றுலா வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டவையோ அல்ல. மாறாக, புவிவெப்பமயமாதல் என்ற பேரழிவிலிருந்து மனிதகுலத்தை காப்பதற்காக எழுப்பப்படும் கூக்குரல்கள் ஆகும். ஆகவே இந்த மாநாட்டில் விடுக்கப்பட்ட அறைகூவலை அலட்சியம் செய்யாமல் நிறைவேற்ற வேண்டியது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலையாய கடமையாகும்.
புவிவெப்பமயமாதலின் தாக்கங்களை இந்தியா உணரத் தொடங்கிவிட்டது. ஒருபுறம் இராஜஸ்தானில் மிக அதிக வெப்பம் பதிவான நிலையில், மறுபுறம் தமிழ்நாட்டின் அவலாஞ்சியில் மிக அதிக மழை பெய்தது. ஐரோப்பாவில் இதுவரை இல்லாத வெப்பம் பதிவாகியுள்ளது. அமெரிக்க கண்டத்தின் மிக வேகமான டோரியன் புயல் 350 கிலோமீட்டர் வேகத்தில் பஹாமாஸ் தீவுகளைத் தாக்கி சின்னாபின்னம் ஆக்கியது. ஆர்ட்டிக் பனிப்பாறை உருகுதல், உலகின் பல நகரங்கள் பெரும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ளுதல் என புவிவெப்பமயமாதல் நம்மை சூழ்ந்து கொண்டிருப்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
இந்த அழிவுகள் அதிகரிக்காமல் தடுக்கவும், புவியைக் காக்கவும் வேண்டுமானால் அடுத்த ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியாகும் அளவு கட்டுப்படுத்தப்படுவதுடன், படிப்படியாக குறைக்கப்படவும் வேண்டும். கரியமில வாயு வெளியாகும் அளவு 2030-ஆம் ஆண்டுக்குள் 50 விழுக்காடாகவும், 2050-ஆம் ஆண்டில் சுழியமாகவும் குறைக்கப்பட வேண்டும். இதற்காக இந்தியா அளிக்க வேண்டிய பங்களிப்புகள் ஏராளம்.
உலகைக் காப்பாற்றுவதற்கான இலக்குகளை எட்ட இந்தியா இப்போது பயணிக்கும் வேகம் போதாது. இந்த வேகத்தை விரைவுபடுத்துவதற்காகத் தான் இந்தியாவில் காலநிலை அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற காலநிலை நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கான ஆசிய-பசுபிக் மாநாட்டில் புதிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா விழித்துக் கொண்டு போர்க்கால வேகத்தில் கரியமில வாயு வெளியாகும் வேகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் காலநிலை அவசர நிலையை அரசுகள் உடனடியாக பிரகடனம் செய்ய வேண்டும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.