இளைஞர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள்: தமிழக மக்களுக்கு மருத்துவர் ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

0
118
Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today
Dr-Ramadoss-News4-Tamil-Latest-Online-Tamil-News-Today

இளைஞர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள்: தமிழக மக்களுக்கு மருத்துவர் ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள்; அவர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள். அவர்கள் ஒன்றாக கை கோர்த்து களமிறங்கினால், தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும், ஏங்கிக் கொண்டிருக்கும் நல்லவைகள் நடந்தே தீரும்.அதற்காக அவர்களுக்கான வழிகாட்டுதலை பாமக வழங்கும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

வாடிக்கிடக்கும் மக்களுக்கு வசந்தங்களை வாரி இறைக்கப்போகும் 2020&ஆம் ஆண்டை வரவேற்று புத்தாண்டு கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

துயரங்களும், பாதிப்புகளும் இன்றுடன் விலகும்… நாளை முதல் நல்லது நடக்கும் என்பது தான் அனைத்து மக்களின் நம்பிக்கையாக உள்ளது. அந்த நம்பிக்கையுடனேயே நாமும்  ஆங்கில புத்தாண்டை வரவேற்போம்.

2019-ஆம் ஆண்டைப் பொறுத்தவரை உண்மை தோற்று, பொய்மை வென்ற ஆண்டு ஆகும். கடந்த  ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பொய்யை மட்டுமே மூலதனமாக்கி, மக்களை மயக்கி ஊழல்வாதிகளும், மக்கள் துரோகிகளும் வெற்றி பெற்றனர். 2019-ஆம் ஆண்டு சந்தித்த மிக மோசமான அரசியல் பேரழிவு இது தான். அதன் தீய விளைவுகளை புதிய ஆண்டில் சரி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கு உள்ளது. சரியானவர்களை, தகுதியானவர்களை தகுதியான, சரியான இடத்தில் வைப்பதன் மூலம் தான் அரசியலில் ஏற்பட்ட பேரழிவை சரி செய்ய முடியும். அதற்கான அடித்தளத்தை அமைப்பதற்கான அரிய வாய்ப்பை புதிதாய் பிறக்கும் ஆண்டு தமிழக மக்களுக்கு வழங்கும்.

இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலத் தூண்கள்; அவர்கள் தான் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மகத்தான கருவிகள். அவர்கள் ஒன்றாக கை கோர்த்து களமிறங்கினால், தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும், ஏங்கிக் கொண்டிருக்கும் நல்லவைகள் நடந்தே தீரும். அதை உறுதி செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை இளைஞர்கள் படைக்கு பாட்டாளி மக்கள் கட்சி வழங்கும்; வழிநடத்தும்.

பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இந்த ஆண்டும் மனநிறைவளிக்கும் ஆண்டாக அமையவில்லை. சம்பா சாகுபடிக்கு தாராளமாக காவிரி ஆற்று நீர் கிடைத்தாலும் கூட நெல்லுக்கும், கரும்புக்கும் போதிய விலை கிடைக்கவில்லை; அவர்களின் துயரங்களும் தீரவில்லை. பொருளாதார வீழ்ச்சி அனைத்துத் துறையினரையும் பாடாய்படுத்தியுள்ளது; வேலைகளை பறித்துள்ளது.

இரவு வந்தால் அடுத்து பகல் தான் என்பதில் ஐயமில்லை. 2019-ஆம் ஆண்டு மக்களுக்கு பல கசப்பான அனுபவங்களைக் கொடுத்திருக்கலாம். ஆனால், 2020-ஆம் ஆண்டு இனிப்பாக அமையும்…. அனைத்து மக்களுக்கும் அனைத்து நலன்களும், வளங்களும் கிடைக்கும்; பொருளாதாரம் வளரும்; மகிழ்ச்சி பெருகும்; அமைதியும், நிம்மதியும் அனைவருக்கும் கிடைக்கும்; பொய்மைகள் புறக்கணிக்கப்பட்டு, உண்மைகள் வெல்லும் என்று கூறி, அனைவருக்கும் எனது வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை கூறிக் கொள்கிறேன் என்றும் அவர் அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Ammasi Manickam