போதை பொருள் கடத்தல் வழக்கு! சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு!!
சிங்கப்பூர் வாழ் தமிழரான தங்கராஜ் சுப்பையா கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சுமார் 1 கிலோ கஞ்சா கடத்தலை ஒருங்கிணைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருந்த அவருக்கு, 2018ம் ஆண்டு சிங்கப்பூர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவரது சகோதரிகள் மற்றும் உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஐரோப்பிய கூட்டமைப்பு குழு என பல தரப்பில் இருந்தும் தூக்கு தண்டனையை குறைக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் அரசு நிராகரித்தது.
இதனை தொடர்ந்து அவரது சகோதரி தனது சகோதரன் எந்த குற்றமும் செய்யவில்லை, வேண்டு மென்றே அவரை திட்டமிட்டு இந்த வழக்கில் மாட்டிவிட்டதாக கூறி ஜநா மனித உரிமைகள் ஆணையம் வரை சென்று தனது கோரிக்கையை கூறி பார்த்தும் எந்த பலனும் ஏற்படவில்லை.
இதனிடையே சிங்கப்பூரில் போதைப்பொருள் உள்ளிட்ட வழக்குகளில் தூக்கு தண்டனை அதிகமாக நிறைவேற்றப்படுகிறது, மேலும் சர்வதேச அளவில் இந்த தூக்கு தண்டனை குற்றத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக தூக்கு தண்டனை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே சிங்கப்பூர் அரசு தனது கொள்கை முடிவில் மாறாமல் தங்கராஜ் சுப்பையாவுக்கு அங்குள்ள சாங்கி சிறையில் இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றியது.
கடந்த ஆண்டு மட்டும் போதை பொருள் கடத்தல் வழக்கில், சுமார் 11 பேரை சிங்கப்பூர் அரசு தூக்கிலிட்டது குறிப்பிடத்தக்கது.