கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா பிரச்சனை அடங்கும் முன்பே சீனாவிலிருந்து அடுத்த பிரச்சனை கிளம்பியுள்ளது.
சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் எல்லைக்குள் வரும் மாமல்லபுரம் பகுதிக்கு அருகே கொக்கிலமேடு கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையில் வழக்கம் போல மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு டிரம் வந்து கரை ஒதுங்கியுள்ளது.
இதனையடுத்து அது சாதாரண டிரம்மாக இருக்கலாம் என நினைத்து அங்கிருந்த மீனவர்கள் அந்த டிரம்மை உடைத்து பார்த்துள்ளனர். இவ்வாறு உடைத்து பார்க்கும் போது அந்த டிரம்மில் 78 பொட்டலங்கள இருந்துள்ளதை கண்டு மீனவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த மீனவர்கள் இது குறித்து காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
மீனவர்கள் அளித்த அந்த தகவலின் படி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரும், கடலோர காவல் படையினரும் அந்த டிரம்மை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அந்த ட்ரம்மில் இருந்த பொட்டலங்களை காவல்துறையினர் சோதனை செய்ததில், அந்த பொட்டலங்கள் மீதுள்ள அட்டை படத்தில் அனைத்தின் மேலும் ரீபைன்ட் சைனீஸ் டீ என்று சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்துள்ளது.
இதனையடுத்து இதில் சந்தேகமடைந்த காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய அந்த பொட்டலங்கள் அனைத்தையும் சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பரிசோதனையின் முடிவில் பொட்டலங்களில் இருந்தது ஹெராயின் என்ற போதை பொருள் வகையை சேர்ந்த மெத்தாம்பிடைமின் என்ற போதை பொருள் என்பது தெரியவந்துள்ளது.
இந்த போதை பொருளை தண்ணீரில் கலந்து ஊசி மூலமாக உடம்பில் செலுத்தியும், வாய் வழியாக சாப்பிட்டும் மற்றும் இதை பவுடராக்கி மூக்கு வழியாக சுவாசிப்பதன் மூலமாகவும் போதை ஏறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பானது ரூ.230 கோடி என்பதும் இந்த விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் இதை யார் அனுப்பினார்கள் எங்கிருந்து அனுப்பினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த போதைப்பொருள்கள் அனைத்தும் மியான்மர் நாட்டில் இருந்து வந்திருக்கலாம் என்று போதை தடுப்பு பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சீன மொழியுடன் உள்ள இந்த தடை செய்யப்பட்ட இந்த போதைப்பொருள் இந்தியாவின் மாமல்லபுரம் கடற்ககரைக்கு மிதந்து வந்தது எப்படி? என்பது குறித்தும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.ஏற்கனவே சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் பரவியதாக கருதப்படும் இந்த சூழலில் சீன மொழியுடன் உள்ள இந்த போதைப்பொருள் இந்திய எல்லையில் மிதந்து வந்துள்ளது பொதுமக்களிடையே அந்நாட்டின் மீதுள்ள சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.