வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம்.. தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை??
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்து தற்பொழுது அதற்கான முடிவுகளும் வெளிவந்ததை அடுத்து மேற்கொண்டு உயர்கல்வியில் மாணவர்கள் என்ன படிக்கலாம் என்பது குறித்தும் அரசானது அறிவுரை கூறி வருகிறது.
இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளிவரும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டத்திற்கு செல்லும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பள்ளிகளிலும் ஜூன் ஒன்றாம் தேதியே புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாறு இருக்கும் சூழலில் தற்பொழுது அக்னி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதே போல இதர மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.எனவே அதனை கருத்தில் கொண்டு உத்திரபிரதேசம், ஜார்கண்ட் போன்றவற்றில் ஜூன் 10 மற்றும் 15ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர்.
அதேபோல நமது தமிழகத்திலும் பள்ளி திறப்பானது தள்ளிப் போடப்படுமா என்று ஒரு மாதத்திற்கு முன்பே பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கேட்டபோது, பள்ளி திறக்கும் சமயத்தில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து முதல்வரின் ஆலோசனைக் கிணங்க அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
இதை வைத்துப் பார்க்கையில் தற்பொழுது தமிழகத்தில் கிட்டத்தட்ட 18 மாவட்டங்களில் 100 டிகிரி பாராஹீட் தாண்டி உள்ளதால் மாணவர்களால் விரைவில் பள்ளிக்கு செல்ல முடியாது என கூறுகின்றனர். எனவே பள்ளி திறப்பு தேதி ஆனது தள்ளிப் போட அதிக வாய்ப்புள்ளதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பானது நாளடைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.