பாமக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது குறுக்கிட்ட துரைமுருகன்..பரப்புரையில் நடந்த ஓர் சுவாரஸ்ய சம்பவம்..!!
தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எப்படியாவது வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய நான்கு முக்கிய கட்சிகளும் அவரவர் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இதில் பாஜக உடன் பாமக, அமமுக, தாமக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல திமுக உடன் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், இந்தியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஒர் சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது.
அதாவது, பாஜக தலைமையிலான பாமக வேட்பாளர் பாலு, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்து விட்டு திரும்பிய தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அந்த வழியாக வந்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகனை கண்டதும் பாமக வேட்பாளர் பாலு, ”எனக்கு முருகன் அருள் கிடைத்திருக்கிறது. அண்ணன் துரைமுருகனின் அன்பான ஆசிர்வாதமும், அருளும் என்னை வெற்றி பெற வைக்க வேண்டும். நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். வெற்றி பெற்றதும் முதலில் உங்களை வந்து சந்தித்து என்னுடைய நன்றியை கூறுகிறேன்” என்று கூறினார்.
இதற்கு துரைமுருகனும் கொஞ்சம் கூட முகத்தை சுளிக்காமல் சிரித்துக்கொண்டே சென்றார். இதனால் அப்பகுதியில் கொஞ்சம் கலகலப்பு நிலவியது. தேர்தல் பிரச்சார சமயங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.