போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி! நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது!
சேலத்தில் இரவு ரோந்து பணியின்போது நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் கைது.கூட்டாளிகள் நான்குபேர் தப்பியோடிய நிலையில் நெல்லை காவல்துறையினரிடம் பிடிபட்ட பிரபல ரவுடியை ஒப்படைத்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் இரவு ரோந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது அதிகாலை சாலையோரம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
அதிலிருந்த மூன்று பேரிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்தனர். இதையடுத்து போலீசார் காரில் சோதனை நடத்தியபோது இரண்டு அரிவாள்கள், மூன்று கத்திகள் இருந்தது. அப்போது போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோதே மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோட்டம் பிடித்தனர்.
இதுப்பற்றி உடனடியாக மாநகர காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் துணை ஆணையாளர் லாவண்யா,உதவி ஆணையாளர்கள் ஆனந்தி,அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரிலிருந்து தப்பியோடிய ஒருவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அரிவாள், கத்திகளுடன் காரை பறிமுதல் செய்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. திருநெல்வேலி மாவட்டம் தாளையூத்து பகுதியை சேர்ந்த குமார் என்ற கொக்கி குமார் என்பதும், இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 22 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதில் நான்கு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் தேடி வந்ததும் தெரிய வந்தது. தப்பியோடியது இவரது கூட்டாளிகளான சுடலைமுத்து, முத்து சுந்தரபாண்டி, மாரி என்பதும் தெரியவந்தது.
மேலும் சென்னைக்கு செக்யூரிட்டி வேலைக்கு காரில் செல்வதாக கொக்கிகுமார் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் தப்பியோடிய கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
இவர்கள் யாரையாவது கொலை செய்ய கூலிப்படையாக வந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கொக்கிகுமார் மீது பிடிவாரண்ட் இருப்பதால் நெல்லை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் நெல்லை தாளையூத்து போலீசார் சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு வருகை தந்த நிலையில், அவர்களிடம் கொக்கிகுமாருடன் காரையும் ஒப்படைத்தனர்.சேலத்தில் அதிகாலையில் நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.