நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி சிரியா- 4300 பேர் பரிதாப பலி!!
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்துள்ளது. சாலைகளிலும், தெருவோரங்களிலும் மக்கள் பீதியோடு சோகமாக அமர்ந்திருக்கின்றனர். துருக்கி நாட்டின் காஜியான்தெப் நகரில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நகர் பகுதியிலிருந்து 33 கிமீ தொலைவில், 18 கி மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் சிரியாவின் அலெப்போ மற்றும் ஹமா நகரில் இருந்து 330 கி மீ தொலைவில் உள்ள துருக்கியின் தியர்பாகிர் நகர் வரையிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
அதிகாலை நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பலரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபதாக உயிரிழந்தனர். சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் நிலையில், தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலும் கடுமையான சேதம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியாவில் மொத்தமாக 4300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துருக்கியிலும் சிரியாவிலும் தொடர்ந்து மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்தடுத்து தொடர்ந்து நில அதிர்வுகளும், நிலநடுக்கங்களும் ஏற்பட்டு மக்களை மேலும் பீதிக்குள்ளாக்கி வருகின்றன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 50 முறை நில அதிர்வுகள் பதிவானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் மிக மோசமான பேரிடரை சந்தித்துள்ள துருக்கிக்கு மீட்புப்பணிகளில் உதவ இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் முதல் கட்ட நிவாரண உதவிகளையும் அனுப்பவும் உத்தரவிட்டார்.