மத்திய அரசானது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து வர கூடிய நிலையில், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற புதிய திட்டம் ஒன்றை உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் நோக்கமானது நிதி உதவி பெறாத சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்களுக்கு கடன்களை வழங்கி அவர்களுடைய வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதாகும்.
இவற்றை மத்திய அரசு 4 பிரிவுகளாக வகைப்படுத்தி உள்ளது. அவை பின்வருமாறு :-
✓ ஷிஷு – இந்த பிரிவின் மூலம் சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்கள் 50,000 ரூபாய் வரை கடன் தொகை பெற முடியும்
✓ கிஷோர் – இதன் மூலம் 50,000 முதல் 5 லட்சம் வரையிலான கடனை சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்கள் பெற முடியும்.
✓ தருண் – இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை கடன் தொகையாக சிறு குறு மற்றும் நுண் தொழிலாளர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.
✓ தருண் பிளஸ் – இந்த திட்டத்தின் மூலம் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை நுண் மற்றும் சிறு தொழிலாளர்களால் கடன் தொகை பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
குறிப்பாக பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய கடன்கள் விவசாயம் அல்லாத கார்ப்பரேட் அல்லாத தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்த கடன் தொகையானது எந்தவித அடமான பத்திரமும் இல்லாமல் தொழில்முனைவோர்களுக்காக பெரிய ஆதரவை வழங்க வேண்டும் என திட்டமிடப்பட்டு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் பொது துறை வங்கிகள் தனியார் வங்கிகள் வணிக வங்கிகள் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் பொழுது எடுத்துச் செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள் :-
✓ தொழில் திட்டம்
✓ ஆதார் அட்டை
✓ வாக்காளர் அடையாள அட்டை
✓ இருப்பிடச் சான்றிதழ்
✓ வருமானவரி சான்றிதழ்