கனடாவில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் தங்களுடைய குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை கொடுப்பதற்காக தங்களுடைய உணவுகளை 25 சதவீதம் பெற்றோர் தியாகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது என்று ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, மளிகை பொருட்களின் விலை உயர்வு மற்றும் உணவு வங்கிகளில் ஏற்படும் தட்டுப்பாடு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி அங்குள்ள மக்களிடையே ஆய்வு நடத்தி நேற்று அறிக்கை வெளியிட்டது. கனேடியப் பெற்றோர்களில் 25 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குவதற்காக தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.
மேலும், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்ற தேவைகளுக்காக தங்கள் மளிகைச் செலவைக் குறைத்துள்ளனர். விலையைக் குறைக்க சில அத்தியாவசியப் பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிறுத்தி வைப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.