டாஸ்மாக் ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் இந்தி கூட்டணிக் கட்சியினருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதலமைச்சர் முக.ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், சென்னையில் கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதல்வர் தலைமையில் நடக்கும் கூட்டம் ஒரு நாடகம். தொகுதி மறுசீரமைப்பை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்கு எந்த பிரச்சனையும் வராது. ஒரு சீட் கூட மத்திய அரசு குறைக்கப் போவதில்லை.
தமிழ்நாட்டின் உரிமைகளை அண்டை மாநிலங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். 4 முறை கேரளாவுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், ஒரு முறை கூட மாநில பிரச்சனை குறித்து பேசவில்லை. அதேபோல், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அணை கட்டியே தீருவேன் என சொல்கிறார். அதற்கு கூட முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஊழல் இந்தியாவையே உலுக்கக் கூடிய வகையில் இருக்கும் என நம்புகிறேன். திமுகவினர் யாரும் பகல் கனவு காண வேண்டாம். ஏனென்றால், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தனது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. எனவே, இந்த ஊழல் வழக்கில் விரைவில் கைது நடவடிக்கை இருக்கும்” என தெரிவித்துள்ளார். அந்த வகையில், டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அண்ணாமலை சூசகமாக தெரிவித்துள்ளார் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.