40 தொகுதியாமே.. டிட்டோவா ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுக்கிறாரா எடப்பாடி பழனிசாமி.! ஒர்க் அவுட் ஆகுமா?
சென்னை:
40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்தை கையில் எடுக்க போகிறார் எடப்பாடி பழனிசாமி. இது அச்சுஅசல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாணி என்றாலும், அது எந்த அளவுக்கு எடப்பாடிக்கு ஒர்க் அவுட் ஆக போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், அவர் சொல்லும்போது, “எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் போன்றோர்கள் எல்லாம், தமிழகம் தழுவிய தலைவர்கள் கிடையாது. ஆனால், தேசம் தழுவிய தலைவர்களாக தங்களை தாங்களே கற்பனை செய்து கொள்கிறார்கள். இதுதான் இவர்களது பிரச்சனையே.
அமித்ஷாவை எடுத்துக் கொண்டால், குஜராத்தில் நின்றால் நிச்சயம் ஜெயிப்பார். ஆனால், தமிழ்நாட்டில் நின்றால் ஜெயிக்க முடியாது. ஆனாலும் அவர் தேசம் தழுவிய தலைவர். காரணம் மத்திய மத்திய உள்துறை அமைச்சராக உள்ளார்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி என்பவர் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே, இதுதான் உண்மையான நிலைமை. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போட்டியிட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் தமிழகம் தழுவிய தலைவர்களாக தங்களை தாங்களே நிரூபித்து விட்டனர். எடப்பாடி பழனிசாமி இன்னமும் நிரூபிக்க வேண்டி இருக்கு. ஆனால் அதுக்குள்ளேயே, ஒற்றை தலைமை விவகாரம் எதற்காகவென்று தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி கற்பனை
எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா போலவே தன்னை கற்பனை செய்து கொள்கிறார் என்று, ஷ்யாம் போலவே பல அரசியல் நோக்கர்களின் கருத்தும் இதுவாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தங்களுக்கு பிடித்தமான அரசியல் கட்சி தலைவரை போல, அல்லது தங்களது அரசியல் ரோல் மாடலாக வரித்து கொண்டவர்களை, முன்மாதிரியாக கொண்டு அரசியல் நடத்துவதில் தவறில்லை என்றும் எடப்பாடிக்கு ஆதரவான குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன.
முதல்வர் மற்றும் பொதுச்செயலாளர் என்ற இந்த இரண்டு பதவியையுமே மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடைசிவரை விடாமல் தன்னிடம் வைத்திருந்தார். சிறைக்கு செல்ல நேர்ந்தபோதுகூட அந்த பதவியை ஓபிஎஸ்-யிடம் ஒப்படைத்துவிட்டு சென்றாரே தவிர, திரும்பவும் தன்னிடமே அதை இறுதிவரை வைத்திருந்தார். ஜெ.போலவே, தனக்கும் ஒற்றை தலைமை மூலம் இந்த பதவி கிடைக்க வேண்டும் என்பதே எடப்பாடியின் ஆரம்ப கால திட்டமாகவும், நிகழ்கால பிடிவாதமாகவும் இருந்து வருகிறது.
ஒற்றை தலைமை விவகாரம்
இதை தன்னுடைய கனவாக மட்டுமே பார்க்காமல், அதற்கான காய் நகர்த்தலையும் மெல்ல ஆரம்பித்தார்.. கடந்த ஒரு வருட காலமாகவே, தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் திமுகவை எதிர்த்து கொண்டே, மறுபக்கம், அதிமுகவை தன் பக்கம் கொண்டுவருவதற்கான இதற்காக களரீதியாக இறங்கிவிட்டார். அதில் பெருமளவு வெற்றியும் பெற்றுவிட்டார். அதனால்தான், இன்று 95 சதவீத நிர்வாகிகளை தன்பக்கம் எடப்பாடியால் தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
கொங்குவை தன்பிடியில் இறுக்கமாக வைத்திருந்த நிலையில், தென்மண்டலங்களில்தான் தன் குறியை வீசினார். இத்தனைக்கும் வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் ஒட்டுமொத்த தென்மண்டலமே எடப்பாடி மீது கோபத்தில் இருக்கிறது என்று தெரிந்தும்கூட, துணிந்து சுற்றுப்பயணம் செய்தார். உதயகுமார் போன்றோரையும் முக்கிய பொறுப்பில் அமர்த்தி, முக்குலத்தோர் கோபத்தையும் குறைக்க முயன்றார்.
இதில் அவருக்கு முழுமையான வெற்றி கிடைக்காவிட்டாலும்கூட, எடப்பாடி நினைத்திருந்தால், மீண்டும் கொங்குவிலேயே உள்ள தன் ஆதரவாளரையே, எதிர்க்கட்சி துணை தலைவராக அறிவித்திருக்க முடியும். ஆனால் அதை அவர் செய்யவில்லை. முக்குலத்தோர் ஆதரவும் தனக்கு தேவை என்பதை நன்றாகவே உணர்ந்துள்ளார்.
வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு
இந்த அளவுக்கு அச்சமுதாய எதிர்ப்பு என்பது, வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டை பெற்று தந்ததால்தான் என்பதை எடப்பாடி பழனிசாமி அறியாமல் இல்லை. “10.5 சதவீத இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று ஓபிஎஸ் கொளுத்தி போட, இதை கேட்டு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொந்தளித்துவிட்டார். உடனடியாக எடப்பாடி பழனிசாமிக்கு, போனை போட்ட டாக்டர் ஐயா, சட்டம் குறித்து கேள்வியை கேட்டதாக தெரிகிறது.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, சட்டம் நிரந்தரமானது, அதை யாரும் நீக்க முடியாது. பயப்பட வேண்டாம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் இன்னும் கூடவே கிடைக்கும் என்று நம்பிக்கை அளித்தாராம். அதன் பிறகே டாக்டர் ஐயா அமைதியானதாக அப்போது அரசல் புரசலாக செய்திகளும் கசிந்தன.
முக்குலத்தோர் எதிர்ப்பு
இப்படி, வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக, முக்குலத்தோர் சமுதாயத்தினரின் எதிர்ப்பை பெற்ற நிலையில், அவைகளை அகற்ற தொடர் முயற்சிகளையும் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார். கடந்த மாதம் நாமக்கல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியபோது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அன்றைய அப்போது சதிகாரர்கள் எவ்வளவோ சதி செய்தார்கள். அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடர்ந்தார்கள். அப்படித்தான் இப்போதும், முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீது வழக்குகள் தொடுக்கிறார்கள், அதை முறியடித்து காட்டுவேன்” என்று பேசியிருந்தார்.
அதாவது, அன்று சதிகாரர்களிடம் இருந்து கட்சியை ஜெயலலிதா காப்பாற்றியது போலவே, இன்று கட்சியை தான் காப்பாற்றுவதாகவும், அதேபோல, பொய் வழக்குகளை எதிர்த்து போரிடுவதாகவும் எடப்பாடியின் பேச்சு அமைந்திருந்ததாக கருதப்பட்டது.
பாஜக வியூகம்
ஜெ.போலவே பேசுவதால் மட்டும் அவரது பாணி அரசியல் என்று சொல்லிவிட முடியாது. பாஜகவின் ஆதரவு என்பது ஓபிஎஸ்ஸுக்கு முழுமையாக கிடைத்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இரட்டை இலையை ஓபிஎஸ்ஸுக்கு தந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலிட ஆதரவு என்பதே தனக்கு சுத்தமாக இல்லாத சூழலில், இதை எடப்பாடி சமாளித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது.
சசிகலாவை கட்சிக்குள் சேர்த்து கொள்ளும்படி, டெல்லி முதல் லீலா பேலஸ் ஓட்டல்வரை நடந்த சந்திப்புகளில் அமித்ஷா போன்றோர் வலியுறுத்திய நிலையில், இன்றுவரை பிடிவாதம் காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது, தனக்கு ஒத்துவராத ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோரிடம் பாஜக நெருக்கமாக இருந்து வரும் நிலையில், தனி நபராக நின்று பாஜகவை சமாளித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
அதிமுக – பாமக கூட்டணி விரிசல்
கடந்த பஞ்சாயத்து தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டபோதே, கூட்டணி இடைவெளி துவங்கிவிட்டதாக கருதப்படுகிறது. இப்போதுவரை பாமக என்ற பேச்சையே எடப்பாடி பழனிசாமி எடுக்காமல் உள்ளார். கூட்டணியில் பாமக இருக்கிறதா? இல்லையா? என்றும் தெரியாத சூழலில், ஒருவேளை பாமகவையும் கழட்டிவிட்டு, இதிலும் ஜெ.பாணியில் தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளாரா என்று தெரியவில்லை.
40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு, சிங்கிளாக வெற்றி பெற்ற ஜெயலலிதா பாணியில், இந்த முறையும் களவாட காத்திருக்கிறாரா எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரியவில்லை. ஆனால், பாஜகவை விட்டு விலகினால், எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் மறுக்க முடியாத தலைவராகி நின்றுவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.