முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் இருக்கும்போதே உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு பின் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவருக்கும், சசிகலா தரப்பினருக்கும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, சசிகலாவை முதல்வராக அறிவித்தார்கள். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேரிட கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அறிவித்துவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா.
அதன்பின் 4 வருடங்கள் முதல்வராக இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அதிமுகவில் பல பிரச்சனைகளை சந்தித்தார். குறிப்பாக ஓ.பன்னீர் செல்வம் பல குடைச்சல்களை கொடுத்தார். ஒருகட்டத்தில் அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து ஓபிஎஸ் துணை முதல்வராக நியமிக்கப்பட்டார். மேலும், பாஜகவுடன் இணக்கமாக இருந்து ஆட்சியை நடத்தினார் எடப்பாடி பழனிச்சாமி. இதை அடிமை ஆட்சி என எதிர்கட்சியான திமுக கடுமையாக விமர்சனம் செய்தது.
இதைத்தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து திமுக ஆட்சியை பிடித்தது. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததே தோல்விக்கு காரணம் என அதிமுக முடிவெடுத்தது. அதன்பின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசிய ஒரு கருத்து அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்த இனிமேல் பாஜகவுடன் கூட்டணி இல்லை என முடிவெடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் பேசிய பழனிச்சாமி பல ஆலோசனைகளை வழங்கினார். திண்ணை பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். காலியாக உள்ள பதவிகளில் உடனடியாக நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். பூத் கமிட்டி பட்டியலை அதிமுக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். பூத் கமிட்டி மிகவும் முக்கியமான ஒன்று. அதனை விரைந்து அமைக்க வேண்டும்’ என பேசியிருக்கிறார்.