எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா?
நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-ன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது!அண்ணா திமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட, இபிஎஸ் கட்சியின் அங்கீகாரப்படி,அந்த பதவிக்கு தகுதியானவர் என்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தொண்டர்கள் உற்சாக வெள்ளத்தில் ஈபிஎஸ்-க்கு எம்ஜிஆர் அணிந்திருக்கும் அடையாளமான, வெள்ளை தொப்பியையும், கருப்பு கண்ணாடியையும் அவருக்கு அணிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
இதன் எதிரொலி பல விதங்களில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. பொதுவாக கலைஞருக்கும், எம்ஜிஆருக்கும் கருப்பு கண்ணாடி மிகப்பெரிய அடையாளம்.எம்ஜிஆர் திமுகவை வீழ்த்த தொடங்கப்பட்டதே அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
இந்நிலையில் கட்சியை கைப்பற்ற ஓபிஎஸ் மேற்கொண்ட பல சதி திட்டங்களை முறியடித்து இபிஎஸ் தலைமையில் மிகச் சரியான பாதையில் அதிமுக செல்வதாக கட்சித் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மக்கள் மத்தியிலும் அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியான தலைவர் என்ற கருத்தும் பேசப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் அவரை எதிர்த்து அரசியல் செய்து வரும் ஓபிஎஸ் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் சின்னம்மாவை வரவேற்கிறேன்,டி.டி.வி. தினகரனை ஆதரிக்கிறேன் என்றெல்லாம் வித விதமான கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு வருகிறார். அதே போல கட்சியை கைப்பற்ற நீதிமன்றங்களின் வாசலில் நின்று கொண்டும் அரசியல் செய்கிறார்.இதற்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவும் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறது.
இந்நிலையில் சமீப காலமாக சட்டசபை நிகழ்வுகளில் ஓபிஎஸ் க்கு சபாநாயகர் தரும் ஒத்துழைப்பை பார்க்கும் பொழுது, அவருக்கு பின்னால்,திமுகவும் இருக்கிறது என்பதை சாதாரண மக்களும் உணரும் படி தான் இருக்கிறது. ஓபிஎஸ்ஸின் கடந்த கால செயல்பாடுகள் இதையும் உறுதி செய்கிறது. பதவிக்காக அவர் யார் பின்னாடியும் போக தயாராக இருப்பார் என அதிமுக தொண்டர்களே பேசி வருகின்றனர்.
அதிமுகவை ஆரம்பித்த எம்ஜிஆர் அவர்களின் அடையாளமாக தான் தொண்டர்களால் அக்கட்சி பார்க்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு கட்சியில் பொறுப்பேற்று கொண்ட ஜெயலலிதாவுக்கும் தொண்டர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. இந்நிலையில் அவரின் மறைவிற்கு பிறகு கட்சிக்கு தலைமை யார் என்பதில் சில ஆண்டுகளாக குழப்பம் நீடித்து வந்தது.
இந்த குழப்பத்தை பயன்படுத்தி மத்திய மற்றும் மாநிலத்தில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் அரசியல் செய்ய ஆரம்பித்தன. அதே நேரத்தில் உட்கட்சியிலும் அதிகாரப்போட்டி ஏற்பட்டு கட்சி சின்னத்திற்கு ஆபத்து ஏற்படும் வரை சென்றது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவு என பார்க்கும் போது கட்சி தலைமைக்கு இபிஎஸ் சரியானவர் என்ற பிம்பம் உருவாகி வருகிறது.
அதன் அடிப்படையில் தான் எம்ஜிஆர் அவர்களின் அடையாளமான வெள்ளை தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடியை தொண்டர்கள் இபிஎஸ்க்கு அணிவித்து மகிழ்ந்தனர்.இந்தவெள்ளை தொப்பி மற்றும் கருப்பு கண்ணாடியும் எம்ஜிஆரை சாமானிய மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தது என்பது பலரும் மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் அதே எம்ஜிஆரின் வெள்ளை தொப்பி கருப்பு கண்ணாடி அடையாளம் எடப்பாடிக்கு கை கொடுக்குமா? என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.