தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த எடப்பாடி பழனிசாமி
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எடப்பாடி பழனிசாமியின் அணுகுமுறையானது முற்றிலும் மாறிவிட்டது என்பதே நிதர்சனம். குறிப்பாக அதன் கூட்டணி கட்சியான பாஜகவால் கூட கணிக்க முடியாத அளவுக்கு அவரின் செயல்பாடுகள் இருந்தன.
ஆரம்பத்திலிருந்து மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவுடன் மென்மையான போக்கை கடைபிடித்த எடப்பாடி பழனிசாமி இந்த இடைத்தேர்தலின் போது கொஞ்சம் கூட அவர்களுக்கு பிடி கொடுக்காமல் தன்னிச்சையாகவே செயல்பட்டார். இதன் விளைவாகவே ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு வேட்பாளர் வாபஸ் வாங்கினார்.
இதனைத்தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மத்தியில் நடக்கும் விவாதம் அக்கட்சிகள் கூட்டணியில் இருக்கிறதா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் உள்ளது. இதை உறுதி செய்யும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டெல்லி சென்ற அண்ணாமலை அமித்ஷாவை சந்தித்து புள்ளி விவரங்களை அளித்தும் அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதை உறுதி செய்து அறிவித்தது அடுத்த அதிர்ச்சியை அளித்தது. மாநில தலைவரான அவரின் கருத்தை தேசிய தலைமை ஏற்க மறுத்தது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழு சம்பந்தமான வழக்கில் வெளியான தீர்ப்பு பாஜக மட்டுமல்லாமல் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.இந்த தீர்ப்பின் மூலமாக அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமியின் தலைமை தான் என்பது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அடுத்தடுத்து நடந்தேறும் நிகழ்வுகள்அனைத்தும்எடப்பாடிக்கு ஆதரவாகவே தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், தமிழக அரசியல் களத்தில் இருக்கும் கட்சிகளின் மத்தியில் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இந்த நிலைப்பாடு வருகின்ற பாராளுமன்ற தேர்தல் கூட்டணி அமைப்பதில் பெரும் குழப்பத்தை உருவாக்கி விட்டது.
அந்த வகையில் கூட்டணியிலிருந்து வெளியேறிய பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இபிஎஸ்ஐ நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறியது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பு மற்ற அனைத்து கட்சிகளின் பார்வையை பாமக பக்கம் திருப்பியுள்ளது.
சமீப காலத்தில் திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கும் என்று பலரும் பேசி வந்த நிலையில் இந்த சந்திப்பு மற்ற கூட்டணி கட்சிகளிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. அதன் வெளிப்பாடாக தான் விசிக தலைவர் அதிமுக பொதுக்குழு வழக்கில் வெளியான தீர்ப்பு குறித்த விமர்சனத்தில் எடப்பாடி மற்றும் பாஜக குறித்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.