2026 சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு வருடத்தில் நடக்கவிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகள் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் பிஸியாகிவிட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும், பாராளுமன்ற தேர்தலின் போதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால், இந்த இரண்டு தேர்தலிலும் அதிமுக தோல்வி அடைந்ந்தது.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். அதேபோல், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக முடிவெடுத்தது.
அந்த நேரத்தில் அதிமுகவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சிக்க அதையே காரணம் காட்டி பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். பாஜக தரப்பில் அவரை சமாதனப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கணிசமான ஓட்டுக்களை வாங்கியது.
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் முன்பு பேசிய அண்ணாமலை ‘பாஜக வேண்டாம் என சொன்னவர்கள் இப்போது பாஜக கூட்டணிக்காக தவம் கிடக்கிறார்கள் என பேசியிருந்தார். அவர் அதிமுகவைத்தான் சொல்கிறர் என அரசியல் விமர்சகர்கள் எல்லாம் சொன்னார்கள். மேலும், திமுகவை எதிர்ப்பதற்காக பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என பலரும் பேசினார்கள்.
ஆனால், இதை எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளர். இதுபற்றிய கேள்விக்கு பதில் சொன்ன அவர் ‘பாஜக கூட்டணிக்கு கட்சிகள் தவம் கிடக்கிறது என அண்ணாமலை கூறியது அதிமுகவை அல்ல. அதிமுகவை குறிப்பிட்டு அவர் பேசவில்லை. 6 மாதங்களுக்கு பின் கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.