கிராமத்து சுவையில் முட்டை குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

0
140
#image_title

கிராமத்து சுவையில் முட்டை குழம்பு – சுவையாக செய்வது எப்படி?

நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு பொருட்களில் ஒன்று முட்டை.இதில் அதிகளவு
கால்சியம்,பாஸ்பரஸ்,புரதம்,செலினியம்,போலிக் அமிலம்,இரும்பு,வைட்டமின்கள் மற்றும் அயோடின் இருக்கின்றது.இந்த முட்டையை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தோம் என்றால் எலும்பு வளர்ச்சி,உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

இந்த ஆரோக்கியமான முட்டையில் சுவையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு செய்யும் முறை எப்படி என்ற தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*முட்டை – 3

*எண்ணெய் – 2 தேக்கரண்டி

*வெங்காயம் – 1 (நறுக்கியது)

*தக்காளி – 1 (நறுக்கியது)

*கொத்தமல்லி தழை – சிறிதளவு

*கரம் மசாலா – 1 தேக்கரண்டி

*பட்டை – சிறு துண்டு

*கறிவேப்பிலை – 1 கொத்து

*இலவங்கம் – 1

*தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி

*வர மிளகாய் – 2

*பூண்டு – 5 பற்கள்

*இஞ்சி – சிறு துண்டு

*கொத்தமல்லி விதை – 1/2 தேக்கரண்டி

*மிளகு – 1 தேக்கரண்டி

*சீரகம் – 1 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் தேவையான அளவு ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் 4 முட்டை மற்றும் சிறிதளவு கல் உப்பு சேர்த்து வேக விடவும்.முட்டை நன்கு வெந்து வந்ததும் அடுப்பை அணைத்து முட்டை ஓடுகளை நீக்கி விட்டு 2 துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் 2 தேக்கரண்டி தேங்காய் துருவல்,2 வரமிளகாய்,5 பற்கள் பூண்டு,இஞ்சி சிறு துண்டு,கொத்தமல்லி விதை 1/2 தேக்கரண்டி,கருப்பு மிளகு 1 தேக்கரண்டி,சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.பின்னர் அடுப்பை அணைத்து அவற்றை நன்கு ஆறவிடவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் வறுத்து ஆறவைத்துள்ள பொருட்களை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் அதில் சிறு துண்டு பட்டை,1 கொத்து கறிவேப்பிலை மற்றும் 1 இலவங்கம் சேர்த்து தாளிக்கவும்.

பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கிளறி விடவும்.பின்னர் இதை 3 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.

பிறகு அதில் கரம் மசாலா சேர்த்த 1 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.அடுத்து வேக வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.இறுதியாக கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்து இறக்கவும்.