அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் போட்ட கடிவாளம்!

0
122

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக இருந்துவருகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆகிய மாநிலங்களில் இதுவரையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் 8 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தில் மட்டும் ஏழு கட்ட தேர்தல் இதுவரையில் முடிந்திருக்கிறது. எட்டாம் கட்ட தேர்தல் நாளை தினம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் பதிவான வாக்கு எண்ணிக்கை எதிர்வரும் மே மாதம் இரண்டாம் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. வழக்கமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது வாக்கு எண்ணிக்கையின் போக்கை வைத்து வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை அரசியல் கட்சியினர் இடையே வந்துவிடும் இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தொண்டர்கள் கட்சி அலுவலகங்களிலும், பொது இடங்களிலும், ஒன்று கூடி கொண்டாட்டத்தை தொடங்கி விடுவார்கள். வெற்றி பெற்று விட்டாலும் கொண்டாட்டங்களுக்கு பஞ்சமே இருக்காது.

ஆனால் இந்தமுறை வெற்றிகொண்டாட்டங்களுக்கும் , ஊர்வலங்களும், தடை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே நோய்த்தொற்று அதனைத் தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இவை இரண்டுமே மிகப்பெரிய தடையாக இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வெற்றி கொண்டாட்டங்களுக்கும், ஊர்வலங்களுக்கும், தேர்தல் ஆணையம் தடை விதித்து இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. அதில் நாடு முழுவதும் நோய் தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து வாக்கு எண்ணிக்கையின் போது இன்னும் சற்று கடுமையான ஏற்பாடுகளை செய்வதற்கு தேர்தல் ஆணையம் முடிவெடுத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது அதனைத் தொடர்ந்து ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் வந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வாங்கிக் கொள்ள வருகை தரும் போது அவருடன் இரண்டு நபர்களுக்கு மேல் அனுமதி வழங்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஸ்டாலின் கேட்ட கேள்வியும்! துரைமுருகன் சொன்ன பதிலும்!
Next articleஅதிமுகவின் முக்கிய புள்ளி மாரடைப்பால் மரணமா? திமுகவினர் அடித்த போஸ்டரால் பரபரப்பு!