ஊரடங்கை தொடர்ந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டது மின்சார ரயில் சேவை!
கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து ஏற்கனவே சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொது போக்குவரத்து அன்று நிறுத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் அன்று முழுவதும் இயங்காது. வாடகை கார்கள், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இயங்காது. அதேபோல சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் புறநகர் மின்சார ரெயில் சேவையை பொறுத்தவரை அத்தியாவசியமாக கருதப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பணிக்கு செல்ல வசதியாக மின்சார ரெயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை.
50 சதவீதம் மின்சார ரெயில்களை இயக்க சென்னை ரெயில்வே கோட்டம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுள்ளது. இது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது
கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வந்துள்ளது. அதனை ஏற்று பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையில் மின்சார ரெயில் சேவை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் வழக்கம் போல அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மின்சார ரெயில் சேவை நடைபெறும் என்றும், ரெயில்களில் பயணம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என கூறியுள்ள நிலையில் டிக்கெட் வழங்குவதிலும் எந்த நடைமுறை மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.