தமிழக அரசின் சார்பில் செயல்படும் ‘டாஸ்மாக்’ நிறுவனம், மாநிலம் முழுவதும் உள்ள 4,830 சில்லறை மதுக்கடைகள் மூலம் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும் அதிகமாக மதுபானங்களை விற்பனை செய்கிறது. இந்த மதுக்கடைகளுக்கு ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யும் முறையில் பெரிய அளவில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதன்மூலம் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடக்கிறது என்றும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை சோதனை
புகார்களின் அடிப்படையில், டாஸ்மாக் நிறுவனத்திற்குப் பெருமளவில் மதுபானங்கள் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் மீது அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். மொத்தம் 25க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் முக்கிய அலுவலகங்களில் சோதனை
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில், திமுக உயர் அதிகாரிகளுடன் தொடர்புடைய எஸ்.என்.ஜெயமுருகனின் ‘SNJ’ மதுபான குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை பாண்டிபஜார் திலக் தெருவில், திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மதுபான தயாரிப்பு நிறுவனம் ‘Accord Distilleries & Brewers’ அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.
டாஸ்மாக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யும், திமுக முக்கியஸ்தரின் நெருங்கிய தோழரான வாசுதேவனின் ‘KALS’ குழுமத்தின் சென்னை அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிறுவனங்களின் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, விழுப்புரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மதுபான ஆலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டனர். சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்திலும் சோதனை நடத்தப்பட்டு, கலால் வரி ஏய்ப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மதுபான விநியோகம் முறைகேடு – ஆயிரம் கோடிகளுக்கு ஊழல்?
அமலாக்கத்துறையின் விசாரணையில், மதுபான ஆலைகளில் இருந்து டாஸ்மாக் சில்லறை கடைகளுக்கு நேரடியாக மதுபானங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் அளவில் ஊழல் நடந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
கொள்முதல் முறையில் முறைகேடு
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், முதலில் 43 குடோன்களில் சேமிக்கப்பட்டு பின்னர் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
கொள்முதல் செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் கலால் வரி செலுத்தப்பட வேண்டும்.
குடோன்களுக்கு கொண்டு வரப்படும் மதுபானங்களின் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
சில்லறை கடைகளில் எவ்வளவு பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை தினசரி கணக்கில் காட்ட வேண்டும்.
ஆனால், அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, இந்த முறையை பின்பற்றாமல் ஆலைகளில் இருந்து நேரடியாக சில்லறை கடைகளுக்கு மதுபானங்கள் விநியோகம் செய்யப்பட்டதோடு, அதன் விற்பனை கணக்குகளும் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
கலால் வரி ஏய்ப்பு – தனி வழக்கு பதிவு திட்டம்
இதன் காரணமாக, அரசுக்கு வழங்க வேண்டிய கலால் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதோடு, கொள்முதல் மற்றும் விற்பனை முறையில் லஞ்சம், ஊழல் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த ஊழல் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், தனியாக வழக்குப் பதிவு செய்யவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.