இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவு! உலக தலைவர்கள் இரங்கல்
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை அவ்வப்போது தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வந்தது. இவ்வாறு உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து வந்தாலும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். குறிப்பாக தொடர்ந்து நடக்க முடியாத சூழலில் கூட அவர் கைத்தடி ஏந்தி இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சமீபத்தில் கூட பிரிட்டன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் ட்ரஸ், மகாராணியை அவர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மகாராணியின் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்று தகவல்கள் வெளியாகி வந்தது. தொடர்ந்து உடல்நிலை மோசமான நிலையில் மகாராணி தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது என பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 96. அவரின் மரணத்தை அடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு ராணி எலிசபெத்தின் கணவரும், எடின்பரோ கோமகனுமான பிலிப் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கணவர் மறைவைத் தொடர்ந்து இவருக்கு உடல் நலம் குன்றியது.