மீண்டும் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தருகிறார் பன்னீர்செல்வம்? பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட மனு!

0
66

பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மிக விரைவில் அதிமுகவின் அலுவலகத்திற்கு செல்வார்கள் எனவும், அதற்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே சி டி பிரபாகர் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு வழங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த மாதம் 11ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கலவரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டு அதன் பிறகு அந்த வழக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக முடிவடைந்தது. ஆகவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிடம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது இந்த நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு பொதுச்செயலாளராக முதன்முறையாக சென்றார்.

இந்த நிலையில், பன்னீர்செல்வத்தின் தரப்பினரும் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல உள்ளதாகவும், அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தும், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ஜே சி டி பிரபாகர் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் மனு வழங்கினார்.

அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த பிரபாகர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மிக விரைவில் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு செல்லவுள்ளதாக கூறினார். பன்னீர்செல்வன் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்றும், அவர் அலுவலகத்திற்கு செல்வதற்கு எந்த விதமான தடையுமில்லை என்றும், கூறினார்.

அதோடு சில சமூக விரோதிகள் தான் பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்திற்கு செல்ல தடையாக இருக்கிறார்கள். அதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், கேட்டுக் கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியை பலவீனப்படுத்தும் விதத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசி வருகிறார். மேலும் அவர் தன் மீதுள்ள அனைத்து வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவே திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இப்படி செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும் பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமி தன்னை ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு இணையாக நினைத்துக் கொண்டு கனவில் மிதந்து கொண்டிருக்கிறார். அதன் வெளிப்பாடாக தான் அவர்களுக்கு இணையாக அலுவலகத்தில் தன் புகைப்படத்தை வைத்துள்ளார் என்றும், தெரிவித்துள்ளார்.