எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சரின் அதிரடி பதில்!

Photo of author

By Sakthi

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு நோய்த்தொற்றின் இழப்பை குறைத்து காண்பிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், நோயாளிகள் அவசர ஊர்திலேயே பலியாகி விடுகிறார்கள். அரசின் ஊரடங்கு தளர்வு காரணமாக, கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவ அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை என்று பலவாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

இந்த சூழ்நிலையில், நேற்று ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோய்த்தொற்று பாதித்துள்ள நோயாளிகளுக்காக கூடுதலாக 120 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் மற்றும் 6 படுக்கையறை கொண்ட கருப்பு பூஞ்சை வார்டின் செயல்பாட்டினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரம்பித்து வைத்தார்.

அதன்பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து இருக்கிறார்.

அதாவது அதிமுகவில் இருக்கக்கூடிய முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், அத்துடன் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்களும் தமிழக முதலமைச்சர் முன்னெடுத்து வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

கடந்த 7ஆம் தேதி வரையில் முதலமைச்சராக இருந்துவந்தார். அன்றைய சூழ்நிலையில், ஆக்சிஜன் இருப்பு என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 230 மெட்ரிக் டன்னாக இருந்துவந்தது. தற்சமயம் ரூர்கேலா, துர்காபூர் ஜாம்ஷெட்பூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மத்திய அரசின் மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு ஆக்சிஜனை கேட்டு வாங்கி வருகிறார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் தமிழ் நாட்டில் தற்சமயம் ஆக்சிஜன் இருப்பு என்பது 650 மெட்ரிக் டன்னாக உயர்ந்து இருக்கிறது. ஆகவே ஆக்சிஜன் குறைவு காரணமாக பலியாகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்திருக்கிறார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்