விமான, ரயில் சேவை தற்போதைக்கு வேண்டாம் – பிரதமர் கூட்டத்தில் பேசிய முதல்வர்

Photo of author

By Parthipan K

விமான, ரயில் சேவை தற்போதைக்கு வேண்டாம் – பிரதமர் கூட்டத்தில் பேசிய முதல்வர்

கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது வரை இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு முன் மாநில முதல்வர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனையை மேற்கொண்டார் பிரதமர் மோடி.

தற்போது 3வது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் பொது முடக்கம் நீட்டிப்பது குறித்தும் ஏற்கனவே மத்திய அரசு 17 தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அமைச்சரவை செயலாளர், அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் அதன் நீட்சியாக இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தங்கள் அரசு கோரியிருந்த 2000 கோடி ரூபாய் விரைவில் விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தார். அத்துடன் கீழகண்ட அம்சங்களையும் முன் வைத்துப் பேசினார்.

  • 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாகவே வழங்கிட வேண்டும்.
  • PCR பரிசோதனைக் கருவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.
  • மருத்துவ உபகரணங்களை மேம்படுத்த, முந்தைய காணொலிக் காட்சி வாயிலான உரையாடலின்போது ஏற்கெனவே வலியுறுத்திய ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும்.
  • நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையை விடுவிக்க வேண்டும்.
  • மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்வதற்காகவும், புலம்பெயர் தொழிலாளர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காகவும் தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும். இந்த மொத்த செலவையும் தற்போது மாநில அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
  • அனைத்து நியாயவிலைக்கடை அட்டைதாரர்களுக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கிட வேண்டும்
  • விமானச் சேவைகளை மே 31 வரை தொடங்க வேண்டாம்.
  • சென்னையில் அதிகளவில் கொரோனாதொற்று பாதித்தவர்கள் இருப்பதால், தமிழகத்தில் மே 31 வரை ரயில் சேவையை அனுமதிக்க வேண்டாம்.