ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! வேட்பாளர்களுக்கு வெளிவந்த முக்கிய அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். 46 வயது கொண்ட திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். இவருடைய மறைவினால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக பூர்வமாக அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனால் அடுத்த வரும் ஆறு மாதத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து அறிவிப்பு தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அடுத்த மாதம் 24 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.அதனை தொடரந்து மார்ச் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அந்த விதிகளின்படி ஈரோடு தொகுதியில் ரொக்கமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை எடுத்து செல்லலாம் என தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. தேர்தலில் வாக்களித்ததை உறுதி செய்யும் விவி பேட் இயந்திரம் பயன்படுத்தப்படும். அதுமட்டுமின்றி மூன்று பறக்கும் படை மற்றும் மூன்று கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் 40 லட்ச ரூபாய் வரை செலவழிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.