சர்வதேச வர்த்தகத்திற்கு முக்கிய கடல் வழி போக்குவரத்தான சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட எவர் கிவன் கப்பல் ஆறு நாட்களுக்கு பிறகு பகுதியளவுக்கு அகற்றப்பட்டது.
ஆசியாவையும், ஐரோப்பாவையும் ஒன்றிணைக்கும் முக்கிய நீர்வழிப் பாதையான எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயை அடைத்துக்கொண்டு ராட்சத கப்பல் ஒன்று தரைத்தட்டி நின்றது. தைவான் நாட்டின் எவர் கிரீன் மரைன் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் எவர் கிவன் என்ற கப்பல் 20000 கண்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு சூயஸ் கால்வாயின் வழியாக சென்றது. அப்பொழுது ஏற்பட்ட பலத்த காற்றுக் காரணமாக 400 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பல் சூயஸ் கால்வாயின் குறுக்காக தரைத்தட்டியது.
கடந்த 23 ஆம் தேதி சீனாவிலிருந்து ராட்டர்டாம் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டதாக தகவல் பரவின. கடந்த 6 நாட்களாக கப்பலை மீட்க முயற்சிகள் நடந்து வருகிறது. இழுவை கப்பல்கள் மூலமாக கப்பலை மீட்க முயற்சிகள் நடந்தன. இது போன்ற விபத்தில் சிக்கும் கப்பல்களை மீட்பதில் திறமை மிகுந்த நெதர்லாந்தின் போகாலீஸ் நிறுவன தொழில்நுட்ப நிபுணர்கள் சூயஸ் கால்வாய்க்கு வந்து , ஆய்வுகளை மேற்கொண்டனர். மீட்புபணி தீவிரமடைந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கப்பலின் ஒருபகுதி அசைக்கப்பட்டு மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எவர் கிவன் கப்பல் சூயஸ் கால்வாயில் சிக்கியதால் அந்த மார்க்கத்தில் செல்லும் கப்பல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு போக்குவரத்து ஸ்தம்பித்தது. நூற்றுக்கணக்கான கப்பல்கள் சூயஸ் கால்வாயில் நின்றதால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றி செல்லப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியதால் கோடிக்கணக்கில் இழப்பும் ஏற்பட்டது.