ட்விட்டரை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக்கிற்கு கட்டணம் – விரைவில் அறிமுகம்!
ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து, மெட்டா நிறுவனமும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளங்களில் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் புளூ டிக் பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார். இப்போது டிவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிலும் பணம் செலுத்தி புளூ டிக் பெறும் முறையை அறிமுகம் செய்ய போவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் பணம் செலுத்தி சரிபார்க்கப்பட்ட கணக்குகளாக மாற்றும் வசதி விரைவில் கிடைக்க உள்ளது. இதன் மூலம் எங்கள் சேவையின் நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் அதிகரிக்கும்’’ எனக் மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.
அதன்படி இணையதளத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் புளூ டிக் பெற மாதம் 11.99 டாலர் (ரூ.983), ஆப்பிள் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு தளத்தில் மாதம் 14.99 டாலர் (ரூ.1300) கட்டணம் பெறப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் கட்டணம் செலுத்தி புளூ டிக் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படும் அதன் பிறகு மற்ற நாடுகளிலும் இந்த வசதி நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது.