அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள குஜராத் தொழில்துறை மேம்பாட்டு கழக வளாகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத் சனந்த் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் யாரும் எதிர்பாராத வகையில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்து வருகின்றன. இதுவரை கிடைத்த தகவலின்படி எந்தவித உயிரிழப்பும் இல்லை. விரைவில் முழுமையாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இவ்விபத்தில் தீயானது கொழுந்து விட்டு எரிந்து வானளவு புகைமூட்டம் உயரே பறந்து அப்பகுதியே கருமேகம் சூழ்ந்தது போல் காட்சி அளிக்கிறது. இதனால் தொழிற்சாலையில் பல லட்சம் மதிபிலான பொருட்கள் தீயில் கருகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஆந்திராவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டு சாலையில் நடந்து சென்ற மக்கள் மூச்சுத்திணறி மயக்கமடைந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு நேரத்தில் தொழிற்சாலை விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.