cinema: தமிழ் சினிமாவின் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவர் மாரி செல்வராஜ் அவர் இயக்கிய திரைப்படங்கள் குறித்து ஓபன் டாக்.
பொதுவாக திரைப்படங்கள் மக்களுடைய வாழ்வியலுக்கும், நம்முடைய அரசியலுக்கும் சம்பந்தப்பட்டதாக, நம் எதிர்கால சன்னதிக்கு உண்மையை கூறும் வகையில் இருக்க வேண்டும். அது நம் வாழ்வியலை உயர்த்தும் வகையில் அமையும் என்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். சென்னை முகப்பேரில் தனியார் பள்ளியில் “வீதி தரும் திரை விருது” என்ற பெயரில் விருது வழங்குதல் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சமீபத்தில் வெளியான 15 திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது. ‘2024 ஆம் ஆண்டு ரிலீஸான கொட்டு காளி, போகுமிடம் வெகு தூரம் இல்லை, தங்கலான், வாழை, லப்பர் பந்து,ஜமா, மெய்யழகன், விடுதலை 2 போன்ற திரைப்படங்கள் விருதுகளை வென்றது’. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாரி செல்வராஜ் மேளம் அடித்து மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார்.
அதைத்தொடர்ந்து,மேடையில் பேசிய அவர் கூறியதாவது, என்னுடைய நான்கு படங்களுக்குமே நான் உங்கள் முன்னாடி விருது வாங்கியதில் சந்தோஷம். ஏனெனில்,ஒரு சரியான பாதையில் தான் செல்கிறேன். பொதுவாக வெளிவரும் படம், நம் வாழ்வியலை குறித்ததாக இருக்க வேண்டும். நாம் எடுக்கும் படம் மக்களுக்கு பிடிக்க வேண்டும். மக்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துமாறு இருக்க வேண்டும்.
நம்முடைய எதிர்காலத்துக்கும் எதிர்கால சந்ததிக்கும் உண்மை சம்பவங்களை கூறுகின்றதா? என்ற அடிப்படையில் உருவாக்க வேண்டும். அப்படி எடுக்கும் படம் ஓடுது? ஓடவில்லை?, சம்பாதிக்குது? சம்பாதிக்கவில்லை? அதெல்லாம் கவனிக்க கூடாது. எவ்வளவு சம்பாதித்தாலும் கிடைக்காத நிம்மதி, இந்த மாதிரி விளிம்பு நிலையில் உள்ள மக்கள் கொண்டாடும் போது தான் கிடைக்கிறது.
எத்தனையோ விழாவுக்கு அழைக்கும் போது எல்லாம் காரணம் சொல்லி உள்ளேன்? ஆனால் வீதி தரும் விருது விழாவிற்கு இதுவரை நான் வராமல் இருந்ததில்லை. விளிம்பு நிலையில் உள்ள மக்கள் நம் கையை பற்றி கொண்டு வரும்போது தான் நாம் சரியான பாதையில் போய்க் கொண்டுள்ளோம் என்ற உணர்வு என்னுள் அதிகப்படியாக தோன்றுகின்றது. இந்த மக்கள் மத்தியில் இந்த விருதை பெறுவது மிகவும் பெருமையாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.