நாமக்கல் மாவட்டத்தில் மரவள்ளிக் கிழங்கில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை தடுப்பது எவ்வாறு என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவான விளக்கத்தை செய்திக் குறிப்பின் மூலம் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
ஒவ்வொரு வருடமும் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியில் தமிழ்நாடு நம்பர் ஒன் தான். ஆண்டுதோறும் 17500 செக்டர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு 15,644 ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நல்ல லாபத்தை ஈட்டித்தரும் இந்த மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில், தற்போது ஒரு புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதாவது மாவுப் பூச்சித் தாக்கம் தற்போது மரவள்ளிக்கிழங்குகளில் தொடர்ச்சியாக பாதிப்பை ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அதிக வெப்ப நிலையின் காரணமாக இந்த பாதிப்பு ஏற்படும் என வேளாண் மற்றும் தோட்டக்கலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனுடைய பாதிப்பால் ஒளிச்சேர்க்கை முற்றிலுமாக குறைந்து மரவள்ளிக்கிழங்கின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் மட்டுமே இருக்கும். இந்த பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக மரவள்ளி கிழங்கிற்கு போதிய அளவிலான நீர் பாய்ச்சுதல், ஒவ்வொரு முறை நடவு செய்யும்போது அதற்கு உரமாக வேப்பம்புண்ணாக்கு உள்ளிட்டவற்றை பயன்படுத்துதல் இந்த தாக்கத்தை கட்டுப்படுத்தக்கூடியது.
அதேபோல் வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களிலிருந்து மரவள்ளி கிழங்குகளை நடுவதற்கான நடவு பொருட்களை வாங்கி வரும் பட்சத்தில் அதனை பூச்சிமருந்து கரைசலில் சிறிது நேரம் நனைத்து அதன் பின் நடவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் இந்த பாதிப்பில் இருந்து பாதுகாப்பதற்காக முதல் முறையாக அசாடிராக்டின் மருந்தும் இரண்டாவது கட்டமாக ப்ரோப்பினோபாஸ் என்ற மருந்தும் மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.