மகளை கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை
கல்லூரி சென்ற மகளை கேலி கிண்டல் செய்த இளைஞர்களை தட்டி கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகளின் காதல் திருமணம் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை சூறையாடிய சோகத்தை விவரிக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை துர்க்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரேசன். (42 ). தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் லில்லி (20) அதே பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு ஆண்குழந்தை உள்ளது. உடல்நலக்குறைவால் லில்லியின் கணவன் சரத்குமார் உயிரிழந்து விடவே கைக்குழந்தையுடன் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார் லில்லி. மகளின் வாழ்க்கையை கருத்தில் கொண்ட சுந்தரேசன், 2 வது மகள் நதியாவுடன் மூத்த மகள் லில்லியையும் வாலாஜா அரசினர் கல்லூரியில் சேர்த்து படிக்கு வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த சரத்குமாரின் நண்பர்களான அஜித்( 22). சரண்( 22 ) ஆகியோர் கல்லூரி மாணவியை கேலி ,கிண்டல் செய்துள்ளனர். இதே போல் பல நாட்களாக தொடர்ந்து கிண்டல் செய்வதை வழக்கமாகவும் கொண்டுள்ளனர். அச்சத்தில் இந்த சம்பவத்தை தந்தை சுந்தரேசனிடம் கூறியுள்ளனர்.
அஜீத் மற்றும் சரண் ஆகியோர் லாலாப்பேட்டை கூரோட்டில் இருப்பதை பார்த்த தந்தை சுந்தரேசன், இரு இளைஞர்களையும் தட்டி கேட்டுள்ளார் . அப்போது தனது நண்பனின் மறைவுக்கு உனது மகள் தான் காரணம் என கூறி இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரத்தில் இரு இளைஞர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுந்தரேசனை தலை கழுத்து முதுகு, மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குத்தியும், கைகளாலும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சுந்தரேசனை அங்கிருந்வர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சுந்தரேசனை கத்தியால் குத்திய அஜித், சரண் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி தலை மறைவாகினர்.
வாலாஜா அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக சுந்தரேசனை, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரேசன் உயிரிழந்தார்.இதுகுறித்து ராணிப்பேட்டை சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித் மற்றும் சரண் ஆகியோரை தேடி வருகின்றனர் .