வெடி விபத்து: இருவர் பலி! நடந்தது என்ன..?

Photo of author

By Parthipan K

வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே உள்ள மாதேஸ்வரன் மலைப் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வாடகைக்கு குடியேறினார். ராஜா தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்துள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் சீட்டு போட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுப்பதற்காக ஏராளமான பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை வீட்டில் அடுக்கி வைத்துள்ளார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நேற்று இரவு பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்ததில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரும் வெடித்து சிதறியது. இதில் அக்கம் பக்கத்தில் உள்ள நான்கு வீடுகள் உட்பட 5 வீடுகள் எரிந்து சேதமடைந்தது. இதையடுத்து, வெப்படை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் வீட்டிலிருந்த ராஜா மற்றும் அவரது நண்பர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளிடம் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி உடனடியாக நிவாரணம் வழங்க வட்டாட்சியருக்கு உத்தரவிட்டார். வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.