அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Photo of author

By Parthipan K

புதுச்சேரி அருகே உரிய அனுமதியின்றி தயாரித்த பட்டாசுகள் வெடித்ததில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி அரியாங்குப்பம், அந்தோனியர் கோவில் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன். இவரது மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். நெப்போலியன் அரசிடமிருந்து எந்த அனுமதியும் பெறாமல் வீட்டு அருகே பட்டாசு தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவர் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அருகில் இருந்த ஒரு கட்டட வீட்டில் வைத்து பட்டாசு தயாரிக்கும் தொழிலில் ஈடுப்பட்டு வந்தார்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்ததில் நெப்போலியன் பட்டாசு மூலப்பொருள் தேக்கி வைத்திருந்த வீடு வெடித்து தரைமட்டமானது. மேலும், நெப்போலியன் அவரது குடும்பத்துடன் வசித்து வந்த குடிசை வீடும் விபத்தில் சரிந்து தரைமட்டமானது. இதில் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி பத்மா இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியிருந்த நெப்போலியன் மற்றும் அவரது மனைவி பத்மாவை மீட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நெப்போலியனையும், பத்மாவையும் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த வெடி விபத்து சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நெப்போலியனின் 2 மகள்களும் சம்பவம் நடந்த நேரத்தில் வெளியே சென்றிருந்ததால் உயிர் தப்பினர்.