பட்டாசு கடையில் பற்றிய தீ! 5 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
பட்டாசு கடையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள புத்துக்கோவில் பகுதியில் பட்டாசு கடை ஒன்று செயல்பட்டு வந்தது. அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் இந்த கடையில் பட்டாசுகளை வாங்கி செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று காலை திடீரென இந்த பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கடையில் உள்ள பட்டாசுகள் அனைத்தும் பட படவென வெடித்து சிதறின. பட்டாசுகள் முழுவதும் தீ பற்றியதால் அந்தப் பகுதியே பெரிய புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 5 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தீ விபத்தினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. முதற்கட்ட தகவல் மின் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பட்டாசு கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.