சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இதில் திமுக மட்டும் தனித்து 125 தொகுதிகளில் வெற்றி அடைந்திருக்கிறது.இந்தநிலையில், கடந்த 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார், அவருடன் சேர்ந்து அவருடைய அமைச்சரவை சகாக்கள் 34 பேர் பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
அதிமுக கூட்டணி சுமார் 76 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமர இருக்கிறது அந்த கட்சியில் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், சட்டசபையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை பத்து மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் மூன்றாவது தளத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த சமயத்தில் தேர்தலில் வெற்றியடைந்த புதிய சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.
சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு மனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பாக பேரவை தலைவர் பதவிக்கு அப்பாவுவும், துணைத்தலைவர் பதவிக்கு பிச்சாண்டியும் போட்டியிடுவார்கள் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது.