மக்களே குடைக்கு வேலை வந்தாச்சு!! இன்று முதல் தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!!
கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வருடத்திற்கான பருவமழை பெரிய அளவில் கை கொடுக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். கோடை காலத்தில் வற்றிய ஆறு, குளம் இன்று வரை நிரம்பாமல் இருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றத்தை தான் கொடுத்து இருக்கிறது. உரிய நேரத்தில் மழை பெய்யாத காரணத்தினால் மழையை நம்பி பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
நமது அண்டை நாடான இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுசேரியில் ஒரு சில இடங்களில் இன்று முதல் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையை பொறுத்தவரை அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் திருநெல்வேலி, மதுரை, கோவை, சேலம், நீலகிரி, கன்னியாகுமரி, தருமபுரி, ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதேபோல் புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.