பண்டிகையை முன்னிட்டு அதிரடியாக தொடங்கி வைக்கப்பட்ட பரிசோதனை முகாம்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளின் தரத்தை உறுதிப்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில், நடமாடும் உணவு பரிசோதனை முகாம்கள் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

பண்டிகையை முன்னிட்டு அதிரடியாக தொடங்கி வைக்கப்பட்ட பரிசோதனை முகாம்..!!

தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார வகைகளை மக்கள் அதிக அளவில் வாங்குவது வழக்கம். இதனால் இனிப்பு, கார வகைகளின் விற்பனை மற்றும் தயாரிப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு தயாரிக்கும் இனிப்பு மற்றும் கார வகைகளில் அதிக அளவு செயற்கை பொருட்கள் பயன்படுத்துவதோடு, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதனால் இதை வாங்கி உட்கொள்ளும் மக்களின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகிறது. மக்களின் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இனிப்பு மற்றும் கார வகைகளின் தரத்தை உறுதிப்படுத்த சென்னையில் நடமாடும் உணவு பரிசோதனை முகாம்களை அம்மாவட்ட ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி தொடங்கி வைத்துள்ளார்.

இதை அடுத்து பாண்டிபஜார், வடக்கு உஸ்மான் சாலை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இனிப்பு மற்றும் கார வகைகளை விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். உணவு தயாரிக்க பயன்படுத்தும் எண்ணெய், நெய் மற்றும் இதர மூலப் பொருட்களின் தரம், இனிப்பு மற்றும் கார வகைகளில் அதிக அளவில் செயற்கை வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா..?? போன்றவற்றை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கடைகளில் இருந்து 100க்கும் அதிகமான உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். மக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவே இந்த நடமாடும் உணவு பரிசோதனை முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்.

Leave a Comment