பிளஸ் டூ முடித்த மாணவிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் அரசு மகளிர் கலை கல்லூரியில் கலந்தாய்வு!
சேலம் மாவட்டம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் நா ராமா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கான ஆகஸ்ட் 4ம் தேதி இளநிலை பட்டப்படிப்புக்காக முதற்கட்ட சேர்க்கை கலந்தாய்வு தொடங்கவுள்ளது. மேலும் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு பிரிவினர், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்திற்கான வாரிசுகள் பிரிவுக்கான சேர்க்கையும் நடைபெற உள்ளது.
மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி பி ஏ தமிழ், பி ஏ ஆங்கிலம் ,பி ஏ வரலாறு ,பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி கணிதம் போன்ற பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு தொடங்குகின்றது. அதையடுத்த ஆகஸ்ட் 6ஆம் தேதி பிஏ பொறியியல், பி காம் வணிகவியல், பிஎஸ்சி கணினி அறிவியல் ,பி சி ஏ ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் 400 முதல் 250 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
மேலும்அறிவியல் பாட பிரிவுகளுக்கு பிஎஸ்சி புள்ளியியல், பிஎஸ்சி நுண்ணறிவியல், பிஎஸ்சி தாவரவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு 400 முதல் 25 மதிப்பெண் பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. மேலும் கல்லூரி அறிவிப்பு பலகை மற்றும் தொலைபேசி மூலம் தகவல் பெறும் மாணவியர் மேற்கண்ட தேதிகளை தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அதன் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து கலந்தாய்விற்கு வரும் மாணவிகள் தங்களது பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் போன்றவை அனைத்திலும் இரண்டு நகல்கள் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.